பால முருகன் #
சின்னச்சின்னக் குழந்தையம்மா
எங்கள் பாலமுருகன்-புன்
சிரிப்புக்காட்டி மயக்கிடுவான்
எங்கள் பாலமுருகன்
வண்ணமயில் மீதிருப்பான்
எங்கள் பாலமுருகன்-கையில்
வடிவேலும் வைத்திருப்பான்
எங்கள் பாலமுருகன்
பிள்ளையாரின் நல்லதம்பி
எங்கள் பாலமுருகன்-சிறு
பிள்ளைகளின் இனியதோழன்
எங்கள் பாலமுருகன்
கள்ளமில்லா உள்ளங்கொண்டால்
எங்கள் பாலமுருகன்-நம்மைக்
காத்தருள்வான், காத்தருள்வான்
எங்கள் பாலமுருகன்
ஒன்று சேர்தல் #
கூட்டம் கூட்ட மாகவே
குருவி பறந்து சென்றிடும்.
குவியல் குவிய லாகவே
கொட்டிக் கற்கள் கிடந்திடும்.
கூறு கூறாய்ச் சந்தையில்
கொய்யாப் பழங்கள் விற்றிடும்.
குலைகு லையாய்த் திராட்சைகள்
கொடியில் அழகாய்த் தொங்கிடும்.
வரிசை வரிசை யாகவே
வாழை தோப்பில் நின்றிடும்.
மந்தை மந்தை யாகவே
மாடு கூடி மேய்ந்திடும்.
சாரை சாரை யாகவே
தரையில் எறும்பு ஊர்ந்திடும்.
நேரில் தினமும் பார்க்கிறோம்
நீயும் நானும் தம்பியே!
பார் பார் #
தரையின் மேலே
தொட்டி பார்
தொட்டி மேலே
செடியைப் பார்
செடியின் மேலே
பூவைப் பார்
பூவின் மேலே
வண்டைப் பார்
வண்டின் மேலே
பளபளக்கும்
வர்ணம் உண்டு;
அதையும் பார் !
அருமை நேரு #
அருமை நேரு பிறந்தது
அலகா பாத்து நகரிலே
இளைஞர் நேரு படித்தது
இங்கி லாந்து நாட்டிலே.
தீரர் நேரு வாழ்ந்தது
தில்லி நகரம் தன்னிலே.
இன்று நேரு வாழ்வது
எங்கள் பிஞ்சு நெஞ்சிலே !
அ, ஆ #
அ, ஆ என்றேனே.
அத்தை வீடு சென்றேனே.
இ, ஈ என்றேனே.
இட்டலி எட்டுத் தின்றேனே.
உ, ஊ என்றேனே.
உடனே காபி குடித்தேனே.
எ, ஏ என்றேனே.
ஏப்பம் நன்றாய் விட்டேனே.
ஐ என்று சொன்னேனே.
அங்கே நீட்டிப் படுத்தேனே.
ஒ, ஓ என்றேனே.
ஒருமணி சென்று எழுந்தேனே.
ஒள என்று சொன்னேனே.
ஆடிப் பாடிக் குதித்தேனே.
ஃ என்று சொன்னேனே.
அக்கக் காவெனச் சிரித்தேனே!
பத்துப் பைசா பலூன் #
பத்துப் பைசா விலையிலே
பலூன் ஒன்று வாங்கினேன்.
பலூன் ஒன்று வாங்கினேன்.
பையப் பைய ஊதினேன்.
பையப் பைய ஊதவே
பந்து போல ஆனது.
பந்து போல ஆனபின்
பலமாய் நானும் ஊதினேன்.
பலமாய் ஊத ஊதவே
பானை போல ஆனது.
பானை போல ஆனதைக்
காண ஓடி வாருங்கள் !
விரைவில் வந்தால்
பார்க்கலாம்.
அல்லது,
வெடிக்கும் சத்தம்
கேட்கலாம் !
எங்கே செல்லலாம்? #
சைக்கிள் ஏறிக் கொள்ளலாம்;
சைதாப் பேட்டை செல்லலாம்.
காரில் ஏறிக் கொள்ளலாம்;
காரைக் குடிக்குப் போகலாம்.
ரயிலில் ஏறிக் கொள்ளலாம்;
ராமேஸ் வரம் செல்லலாம்.
கப்பல் ஏறிக் கொள்ளலாம்;
கல்கத் தாவை அடையலாம்.
பறவைக் கப்பல் ஏறலாம்;
பாரிஸ் நகரம் போகலாம்.
மனோ ரதத்தில் ஏறலாம்;
வைய மெல்லாம் சுற்றலாம்!
வாழைப் பழம் #
வாழைப் பழத்தில் பல உண்டு
வகைவகை யான பெயர் உண்டு.
பூவன், மொந்தன், ரஸ்தாளி,
பேயன், நேந்திரம், மலைவாழை
என்றே வகைகள் பலஉண்டாம்.
எல்லாம் எனக்குப் பிடித்தவையே.
தினமும் மிகவும் நான்விரும்பித்
தின்பது வாழைப் பழமேதான்!
என்ன கொண்டு வந்தேன் ? #
பழநி மலைக்குச் சென்று வந்தேன்;
பஞ்சா மிர்தம் கொண்டு வந்தேன்.
காசி நகரம் சென்று வந்தேன்;
கங்கை நீரைக் கொண்டு வந்தேன்.
திருப்ப திக்குச் சென்று வந்தேன்;
தித்திப்பு லட்டுக் கொண்டு வந்தேன்.
இராமேஸ் வரம் சென்று வந்தேன்;
என்ன நானும் கொண்டு வந்தேன் ?
ஊ…ஊ…ஊ
ஊ…ஊ…ஊ..
ஊது கின்ற சங்கில்
ஒன்று வாங்கி வந்தேன்!
அண்ணாமலையின் ஆசை #
அண்ணா மலை, அண்ணா மலை,
என்ன சொன்னானாம் ?
ஆனை முதுகில் ஏறிச் செல்ல
ஆசை என்றானாம்.
அண்ணா மலை, அண்ணா மலை,
என்ன சொன்னானாம் ?
ஆற்றுக் குள்ளே படகு விடவே
ஆசை என்றானாம்.
அண்ணா மலை, அண்ணா மலை,
என்ன சொன்னானாம் ?
ஆகாயத்தில் விமானம் ஓட்ட
ஆசை என்றானாம்.
அண்ணா மலை, அண்ணா மலை,
என்ன சொன்னானாம் ?
அமெரிக் கர்போல் நிலவில் இறங்க
ஆசை என்றானாம் !
செடி வளர்ப்பேன் #
தாத்தா வைத்த தென்னையுமே
தலையால் இளநீர் தருகிறது.
பாட்டி வைத்த கொய்யாவும்
பழங்கள் நிறையக் கொடுக்கிறது.
அப்பா வைத்த மாஞ்செடியோ
அல்வா போலப் பழம்தருது.
அம்மா வைத்த முருங்கையுமே
அளவில் லாமல் காய்க்கிறது.
அண்ணன் வைத்த மாதுளையோ
கிண்ணம் போலப் பழுக்கிறது.
சின்னஞ் சிறுவன் நானும்ஒரு
செடியை நட்டு வளர்ப்பேனே
வா, மழையே வா #
கத்திக் கப்பல் செய்து வைத்தேன்.
கால்வாய் கூடத் தோண்டி வைத்தேன்.
வா, மழையே, வா.
வா, மழையே, வா.
சின்னச் செடியை நட்டு வைத்தேன்.
செப்புக் குடத்தை எடுத்து வைத்தேன்.
வா, மழையே, வா.
வா, மழையே, வா.
வீதிப் பக்கம் வந்து நின்றேன்.
மேலே மேலே பார்த்து நின்றேன்.
வா, மழையே, வா.
வா, மழையே, வா.
தங்கமும் சிங்கமும் #
எங்கள் வீட்டுப் பூனை அம்மா
இரண்டு பிள்ளை பெற்றாள்.
இரண்டு பிள்ளை பெற்றாள்-அவள்
என்ன பேரு வைத்தாள் ?
தங்கம் என்றோர் பிள்ளை பெயராம்.
தவிட்டு நிறத்துப் பிள்ளை.
தவிட்டு நிறத்துப் பிள்ளை-அது
தப்பே செய்வ தில்லை.
சிங்கம் என்றோர் பிள்ளை பெயராம்.
தீரம் உடைய பிள்ளை.
தீரம் உடைய பிள்ளை-அது
தீங்கே செய்வ தில்லை.
தங்கம், சிங்கம் இரண்டும் அந்தத்
தாய்க்கு நல்ல பிள்ளை.
தாய்க்கு நல்ல பிள்ளை – இதில்
சற்றும் ஐயம் இல்லை !
ஆண்டவன் தந்த கை #
ஆண்டவன் தந்த கை எதற்கு ?
அள்ளிச் சோறு தின்பதற்கு.
ஆண்டவன் தந்த கை எதற்கு ?
அழுக்குத் தேய்த்துக் குளிப்பதற்கு.
ஆண்டவன் தந்த கை எதற்கு ?
ஆடை ஒழுங்காய் அணிவதற்கு.
ஆண்டவன் தந்த கை எதற்கு ?
அழகாய் எழுதிப் படிப்பதற்கு.
ஆண்டவன் தந்த கை எதற்கு ?
அனுதினம் வேலை செய்வதற்கு.
ஆண்டவன் தந்த கை எதற்கு ?
அனைவருக் குதவி செய்வதற்கு.
ஆண்டவன் தந்த கை எதற்கு ?
அவரை நன்றாய்த் தொழுவதற்கு.
சங்கு சக்கரச் சாமி #
சங்கு சக்கரச் சாமியாம்;
சாய்ந்து படுத்துக் கிடக்குமாம்;
எங்கே, எங்கே, தெரியுமா?
எங்கள் ஊருக் கோயிலில்.
நீட்டிப் படுத்துக் கிடக்குமாம்;
நீல வண்ணச் சாமியைப்
பாட்டுப் பாடி எழுப்பலாம்.
கூட்ட மாக வாருங்கள்.