கணபதி #
தொந்தி இல்லாத கணபதியாம்
துதிக்கை இல்லாத கணபதியாம்
தந்தம் இல்லாத கணபதியாம்
என்
தம்பியே
அந்தக்
கணபதியாம்!
நத்தையின் கேள்வி #
நத்தை என்னைப் பார்த்துப் பார்த்து
முத்து! ஏனோ சிரிக்கிறாய்?
நகர்ந்து நகர்ந்து மெல்ல நானும்
நடப்ப தாகச் சொல்கிறாய்.
வீட்டை முதுகில் தூக்கிக் கொண்டு
விரைந்து செல்லும் மனிதரைக்
காட்டு வாயோ, காட்டு வாயோ,
காட்டு வாயோ, நண்பனே?
பாட்டியும் மாமாவும் #
சுப்பு வுடைய பாட்டி வயது
தொண்ணுற் றொன்பது-அவள்
சுறுசு றுப்பைப் பார்க்கும் போது
இருபத் தொன்பது!
குப்பு மாமா வயது என்ன?
இப்போ இருபது-அவர்
கூனிக் குறுகி நடக்கும் போது
அறுபத் தொன்பது!
செடியும் சின்னத் தம்பியும் #
சின்னச் செடியை நட்டுநான்
தினமும் தண்ணீர் ஊற்றினேன்.
நன்கு செடியும் வளர்ந்தது;
நான்கு மீட்டர் உயர்ந்தது!
சின்னத் தம்பி சேகரும்
செடிபோல் வளர வில்லையே!
இன்னும் குள்ள மாகவே
இருக்க லாமோ? ஆதலால்,
சிறுவன் அவனைத் தினமுமே
செடியின் அருகில் நிறுத்தியே
தண்ணீர் விட்டேன் நாலுநாள்.
சளி பிடித்துக் கொண்டதே!
ஓடுவது ஏன்? #
எலியே, எலியே, ஓடுவதேன்?
என்னைப் பூனை துரத்துவதால்.
பூனையே, பூனையே, ஓடுவதேன்?
பொல்லா வெறிநாய் துரத்துவதால்.
நாயே, நாயே, ஓடுவதேன்?
நாலடிச் சிறுவன் துரத்துவதால்.
சிறுவா, சிறுவா ஓடுவதேன்?
சிறுத்தை பின்னால் துரத்துவதால்.
சிறுத்தையே, சிறுத்தையே, ஓடுவதேன்?
சிங்கம் என்னைத் துரத்துவதால்.
சிங்கமே, சிங்கமே, ஓடுவதேன்?
எங்கோ வேட்டுக் கேட்டதனால்!
கோழியின் வயது #
“கோழிகள் எத்தனை
ஆண்டுகள் உலகில்
வாழும் என்பதை
அறிவாயோ?”
“அறிவேன்; அறிவேன்,
மக்கள் அவற்றை
அறுத்துத் தின்றிடும்
நாள் வரைதான் !
கட்டியவர் யார் ? #
தாஜ்மகாலைக் கட்டியவர்
யார்? யார்? யார்?
சக்ரவர்த்தி ஷாஜகானாம்
கேள், கேள், கேள்.
தஞ்சைக்கோயில் கட்டியவர்
யார்? யார்? யார்?
தரணிபோற்றும் ராஜராஜன்
கேள், கேள், கேள்.
கல்ல ணையைக் கட்டியவர்
யார்? யார்? யார்?
கரிகால மன்னவனாம்
கேள், கேள், கேள்.
குதுப்மினாரைக் கட்டியவர்
யார்? யார்? யார்?
குஷவுபுஷனுனாம் அடிமைமன்னன்
கேள், கேள், கேள்.
முழங்காலைக் கட்டியவன்
யார்? யார்? யார்?
முனியன்எனும் சோம்பேறி
கேள், கேள், கேள்
சட்டை போட்ட ஒட்டைச் சிவிங்கி #
ஒட்டைச் சிவிங்கி ஒன்றுக்குச்
சட்டை போட்டுப் பார்க்கவே
எட்டுக் குரங்கு கூடின.
என்ன என்ன செய்தன?
ஒருகுரங்கு பாய்ந்து பாய்ந்தே
ஓடிச் சென்றது.
ஊருக் குள்ளே துணிக் கடைக்குள்
புகுந்து விட்டது.
பூக்கள் போட்ட பட்டுத் துணியை
அள்ளிக் கொண்டது.
பிடிக்க வந்தால் ‘உர்உர்’ என்று
கடிக்க வந்தது.
வேல மரத்தில் ஒருகுரங்கு
ஏறிக் கொண்டது.
வேண்டு மட்டும் முள்ளை யெல்லாம்
திரட்டி வந்தது.
காலின் அருகே நாலுகுரங்கு
நின்று கொண்டன.
கர்ணம் போட்டு இரண்டு குரங்கு
முதுகில் ஏறின.
ஒட்டைச் சிவிங்கி உடம்பில் துணியைப்
போர்த்தி விட்டன.
ஒழுங்கு பார்த்து மீதித் துணியைக்
கடித்துக் கிழித்தன.
அந்தத் துணியில் சமமாய் ஐந்து
பங்கு போட்டன.
அவற்றில் நான்கை நான்கு, காலில்
நன்கு சுற்றின.
மீதம் உள்ள துண்டுத் துணியால்
கழுத்தை மூடின.
விரைந்து கூடி எட்டுக் குரங்கும்
வேலை செய்தன.
ஓரம் முழுதும் முட்க ளாலே
பொருத்தி விட்டன.
உடனே எட்டுக் குரங்கும் எதிரே
வந்து நின்றன.
‘ஓஹோ! ஓஹோ!’ என்றே அவைகள்
குதிக்க லாயின.
உடுப்புப் போட்ட சிவிங்கி யாரைப்
பார்த்து மகிழ்ந்தன!
பார்த்துப் பார்த்து மகிழ்ச்சி யாலே
துள்ளிக் குதித்தன!
பாய்ந்து சென்று சிவிங்கி முதுகில்
ஏறிக் கொண்டன.
எட்டுக் குரங்கை முதுகில் ஏற்றிக்
கொண்ட சிவிங்கியும்
இன்ப மாகக் காடு முழுதும்
சுற்றி வந்தது.
ஒட்டைச் சிவிங்கி சட்டை போட்டு
எட்டுக் குரங்குடன்
வெற்றி பெற்ற வீரன் போலச்
சுற்றி வந்ததை,
மற்ற மிருகம் யாவும் பார்த்து
மகிழ்ச்சி கொண்டன.
மரத்தி லிருந்த பறவை யெல்லாம்
வியப்புக் கொண்டன.
கண்ணனும் அண்ணனும் #
அண்ணன் : கண்ணா, அருகில் வந்திடுவாய்.
கண்ணன் : காலில் சுளுக்கு; முடியாது.
அண்ணன் : கண்ணா, கணக்குப் போட்டிடுவாய்.
கண்ணன் : கையை வலிக்குது; முடியாது.
அண்ணன் : கண்ணா, பாடம் படித்திடுவாய்.
கண்ணன் : கடைவா யில்புண்; முடியாது.
அண்ணன் : கண்ணா, மாடி அறைக்குள்ளே
கறுத்த அட்டைப் பெட்டியிலே,
காசுகள் நிறைய வைத்துள்ளேன்.
கணக்காய் எண்ணிச் சொல்லிடுவாய்.
சரியாய்ச் சொன்னால், அத்தனையும்
தருவேன் உனக்கு, உனக்கேதான்!
சீடை முறுக்கு வாங்கிடலாம்;
தின்று நீயும் மகிழ்ந்திடலாம்.
கண்ணன் : அண்ணா, அண்ணா, இப்பொழுதே
அத்தனை படியும் ஏறிடுவேன்.
எட்டிப் பாய்ந்து பெட்டியிலே
இருக்கும் பணத்தை எண்ணிடுவேன்.
சீக்கிரம் எண்ணிச் சொல்லிடுவேன்.
சீடை முறுக்கு வாங்கிடுவேன்.
ஆசை தீரத் தின்றிடுவேன்.
அண்ணன் சொல்லைத் தட்டுவதா?
சந்தைக்குப் போனேன் #
சந்தைக்குப் போனேன்; சந்தைக்குப் போனேன்
சாம்பல் பூசணி வாங்கிடவே.
சண்டைக்குப் போனேன், சண்டைக்குப் போனேன்
தாய்த்திரு நாட்டைக் காத்திடவே.
வெல்லத்தைப் பார்த்தேன்; வெல்லத்தைப் பார்த்தேன்
வேலுச் சாமி கடையினிலே.
வெள்ளத்தைப் பார்த்தேன்; வெள்ளத்தைப் பார்த்தேன்
விடாது பெய்த மழையினிலே.
தவளை பார்த்தேன்; தவளை பார்த்தேன்
தரையில் தத்திச் செல்கையிலே.
தவலையைப் பார்த்தேன்; தவலையைப் பார்த்தேன்
தங்கை தூக்கி வருகையிலே.
கொல்லையில் கிடைத்தது; கொல்லையில் கிடைத்தது
கொத்துக் கொத்தாய் மல்லிகையே.
கொள்ளையில் கிடைத்தது; கொள்ளையில் கிடைத்தது
கொடியவ னுக்குத் தண்டனையே!
தாடிச் சாமியார் #
அக்கரைச் சீமையில்
சர்க்கரைச் சாமி
அவரது தாடி
அரைமைல் நீளம் !
தாடியைப் பிடித்துத்
தாங்கிச் செல்ல
அறுபது சீடர்
அவருக் குண்டு!
தேர்வடம் பிடித்துச்
செல்வது போலே
இருக்கும் அந்த
இனியநல் காட்சி!
சர்க்கரைச் சாமி
சாலையின் குறுக்கே
சிற்சில சமயம்
செல்லுவ துண்டு
சாலையைக் கடக்கச்
சரியாய் அரைமணி
ஆகும். அதனால்
அடடா, அடடா!
அனைவரும் அங்கே
அவதிப் படுவர்
எதிர்எதிர்த் திசையில்
எத்தனை கார்கள்!
எத்தனை வண்டிகள்!
எத்தனை மனிதர்கள்!
‘பாம்பாம்’ சத்தம்
பலமாய்க் கேட்கும்
‘கிணிங் கிணிங்’ எனவே
மணிகள் ஒலிக்கும்.
“எத்தனை நேரம்
இப்படி நிற்பது?”
என்பார் பலபேர.்
எனினும் சிலபேர்,
தாடியின் மேலே
தாண்டிச் செல்வர்;
தாடியின் கீழே
தவழ்ந்தும் போவர்.
குழந்தைக ளெல்லாம்
குடுகுடு என்றே
தாடியின் அடியில்
ஓடிடு வார்கள்.
சர்க்கரைச் சாமி
தாடியின் மகிமை
எடுத்துக் கூறிட
எவரும் முயன்றால்,
தாடிபோல் அந்தச்
சரித்திரம் நீளும்.
வேண்டாம். இத்துடன்
விடைபெறு கின்றேன்.
குப்புசாமி-அப்புசாமி #
அண்ணன்
குப்புசாமி, குப்புசாமி,
கோடி வீட்டிலே
அப்புசாமி இருந்திடுவார்,
அழைத்து வந்திடு.
தம்பி
அப்பு சாமி வீட்டிலே
அவரைக் காணோம் என்றிடின்…?
அண்ணன்
தெப்பக் குளத்தங் கரையிலே
தேடிப் பார்த்து அழைத்துவா.
தம்பி
தெப்பக் குளத்தங் கரையிலே
தேடிப் பார்த்தும் இல்லையேல்…?
அண்ணன்
சுப்ர மணியர் கோயிலைச்
சுற்றி வருவார்; அழைத்துவா.
தம்பி
சுப்ர மணியர் கோயிலைச்
சுற்றிப் பார்த்தும் இல்லையேல்…?
அண்ணன்
கப்பல் காரன் தெருவிலே
கடையில் இருப்பார்; அழைத்துவா.
தம்பி
கப்பல் காரன் தெருவிலே
கடையில் பார்த்தும் இல்லையேல்…?
அண்ணன்
சும்மா திரும்பி வந்திடு.
துரித மாகச் சென்றிடு.
தம்பி
சும்மா திரும்பி வரவாநான்
இம்மாந் தூரம் அலைவது?
அம்மா டியோ! இங்குநான்
நிம்மதி யாய்த் தூங்குவேன்.