இப்படி நேரம் ஒதுக்கிடுவேன்! #

ஓடி ஆட ஒருநேரம்.
உணவை உண்ண ஒருநேரம்.

பாடம் படிக்க ஒருநேரம்.
படுத்துத் தூங்க ஒருநேரம்.

பெற்றோ ருக்கு ஒருநேரம்.
பிறருக் காக ஒருநேரம்.

இப்படி நேரம் ஒதுக்கிடுவேன்.
என்றும் இன்பம் பெற்றிடுவேன்.

நல்ல ஆசிரியர் #

‘அ’ ‘ஆ’ எனக்குச் சொல்லித் தந்த
ஆசிரியர், நல்ல ஆசிரியர்.
அப்பா வுக்கும் கற்றுக் கொடுத்த
ஆசிரியர் நல்ல ஆசிரியர்.

‘அ’ ‘ஆ’ எனக்குச் சொல்லித் தந்த
ஆசிரியர், நல்ல ஆசிரியர்.
அம்மா வுக்கும் கற்றுக் கொடுத்த
ஆசிரியர், நல்ல ஆசிரியர்.

எத்தனை பேர்கள் எழுதப் படிக்க
இவரிடம் கற்றுக் கொண்டனரோ !
அத்தனை பேரும் அன்புடன் மதிக்கும்
ஆசிரியர், நல்ல ஆசிரியர் !

கை #

அன்னம் எனக்கே
ஊட்டிய கை.
அன்பாய்த் தொட்டில்
ஆட்டிய கை.
வண்ணப் பறவை
காட்டிய கை.
மலர்கள் தலையில்
சூட்டிய கை.
கண்கவர் சட்டை
மாட்டிய கை.
கண்ணில் மையைத்
தீட்டிய கை.
கட்டி அணைத்துப்
போற்றிய கை.
கடவுள் போன்ற
அன்னையின் கை !

தாய்மொழி #

தாய்சொல்லித் தந்த மொழி.
தாலாட்டில் கேட்ட மொழி.

சந்திரனை அழைத்த மொழி.
சாய்ந்தாடிக் கற்ற மொழி.

பாட்டிகதை சொன்ன மொழி.
பாடிஇன்பம் பெற்ற மொழி.

கூடிஆட உதவும் மொழி.
கூட்டுறவை வளர்க்கும் மொழி.

மனந்திறந்து பேசும் மொழி.
வாழ்க்கையிலே உதவும் மொழி.

எங்கள் தாய்மொழி-மிக
இனிய தமிழ்மொழி.
இனிய தமிழ்மொழி-அது
எங்கள் தாய்மொழி.

பத்து நண்பர்கள் #

மொத்தம் நண்பர்கள் பத்துப்பேர்
நித்தம் எனக்கே உதவிடுவார்.

நித்தம் உதவும் அவர்களுமே
நிற்பார் இரண்டு வரிசைகளில்.

பல்லைத் துலக்க ஒருநண்பர்.
பாடம் எழுத இருநண்பர்.

உணவை ஊட்ட ஐவர்களாம்.
உடலைத் தேய்க்கப் பத்துப்பேர்.

இப்படி உதவும் நண்பர்களை
எப்படி நானும் பிரிந்திருப்பேன் ?

என்னை விட்டுப் பிரியாமல்
இருக்கும் அந்த நண்பர்கள்போல்

உங்களி டத்தும் பத்துப்பேர்
ஒட்டிக் கொண்டே இருப்பார்கள்.

அவர்கள் யார்யார் தெரிகிறதா ?
அவசியம் நீங்கள் அறிந்திருப்பீர்.

இருகை விரித்துக்
காட்டுகிறேன்.
எண்ணிப் பார்த்தால்
பத்துப்பேர் !

பாடுவேன், ஊதுவேன் #

பாட்டுப் பாடுவேன்-நான்
பாட்டுப் பாடுவேன்.
பலரும் புகழ, இனிய தமிழில்
பாட்டுப் பாடுவேன்.
கேட்டு மகிழவே-நீங்கள்
கேட்டு மகிழவே,
கிளியின் மொழிபோல் இனிய தமிழில்
கீதம் பாடுவேன்-நான்
கீதம் பாடுவேன்.

குழலை ஊதுவேன்-புல்லாங்
குழலை ஊதுவேன்.
கோகு லத்துக் கண்ணன் போலக்
குழலை ஊதுவேன்-நான்
குழலை ஊதுவேன்.
அழகாய் ஊதுவேன்-மிக்க
அழகாய் ஊதுவேன்.
அனைவர் மனமும் மகிழும் வகையில்
அழகாய் ஊதுவேன்-நான்
அழகாய் ஊதுவேன்.

வரம் #

இறைவா, எனக்கொரு வரம்தருவாய்.
இனியதை நினைக்க அருள்புரிவாய்.

இறைவா, எனக்கொரு வரத்தருவாய்.
இனியதைப் பேச அருள்புரிவாய்.

இறைவா, எனக்கொரு வரம்தருவாய்.
இனியதைச் செய்ய அருள்புரிவாய்.

எண்ணம், வாக்கு, செய்கையிலே
இனிமை இருந்தால் வாழ்க்கையிலே,
இன்பம், இன்பம், இன்பம்தான்.
இல்லா விட்டால் துன்பம்தான் !

அண்ணாமலை, அண்ணாமலை #

அண்ணாமலை, அண்ணாமலை
அண்ணாந்து பார்த்தான்.

ஐம்பதடி உயரத்திலே
அண்ணாந்து பார்த்தான்.

அண்ணாமலை, அண்ணாமலை
அண்ணாந்து பார்த்தான்.

ஆடிஆடிப் பறக்கும்பட்டம்
அண்ணாந்து பார்த்தான்.

அண்ணாமலை, அண்ணாமலை
முன்னாலே பார்த்தான்.

ஐம்பதடி தூரத்திலே
முன்னாலே பார்த்தான்.

அசைந்தசைந்து நடந்துவரும்
ஆனையைப் பார்த்தான்

அண்ணாமலை, அண்ணாமலை
பின்னாலே பார்த்தான்.

ஐம்பதடி தூரத்திலே
பின்னாலே பார்த்தான்.

அண்ணாமலை, அண்ணாமலை
பின்னாலே பார்த்தான்

ஆடிப்பாடி ஓடிவரும்
அலமுவைப் பார்த்தான்.

அண்ணாமலை, அண்ணாமலை
அண்ணாந்து பார்த்தான்

அண்ணாமலை, அண்ணாமலை
முன்னாலே பார்த்தான்.

அண்ணாமலை, அண்ணாமலை
பின்னாலே பார்த்தான்.

அலமு, யானை, பட்டமெல்லாம்
கண்ணாலே பார்த்தான் !

தாத்தாவின் கைத்தடி #

எங்கள் பூசை அறையிலே
இருக்கும் அழகுக் கைத்தடி
எங்கள் தாத்தா கையிலே
இருந்த நல்ல கைத்தடி

தங்கப் பூணும் பிடித்தது
சந்த னம்தான் மணக்குது
பெங்க ளூரில் இருக்கையில்
எங்கள் தாத்தா பெற்றது

அறுப தாண்டு நிறைந்ததும்
அருமைத் தாத்தா நண்பர்கள்
பிரிய மாகத் தந்தது
பெருமை மிக்க கைத்தடி !

கறுப்பும் வெள்ளையும் #

கறுப்பு, வெள்ளை இரண்டு நிறமும்
கலந்தி ருக்கும் எங்கள் பசு.
காலை, மாலை இரண்டு வேளை
பாலைத் தரும் எங்கள் பசு.

கறுப்பும் வெள்ளையும் கலந்த பசுவில்
கறந்து கறந்து வெள்ளைப் பாலை
விரும்பி நாங்கள் குடித்தி டுவோம்;
மிகவும் மகிழ்ச்சி அடைந்திடுவோம்.

நான் இந்தியன் #

‘இந்தியன்’ என்று சொல்லிக் கொள்வதில்
என்றும் பெருமை கொண்டிடுவேன் !

இந்திய னாக இருந்திட நானும்
என்றும் முயற்சி செய்திடுவேன் !

இந்தியர் அனைவரும் ஒன்றென எண்ணி
என்றும் அன்பாய் நடந்திடுவேன் !

இந்திய நாட்டின் பெருமை உயர
இயன்றதை யெல்லாம் செய்திடுவேன் !

மரவட்டை #

ஊர்ந்து செல்லும் அட்டையைக்
கூர்ந்து பார்த்தேன் நானுமே.

அடடே, கால்கள் எத்தனை !
யாரால் எண்ண முடியுமோ ?

ஆயி ரந்தான் இருக்குமோ ?
அதற்கு மேலும் போகுமோ ?

இரண்டு கால்கள் உடையநான்
என்ன வேகம் செல்கிறேன்.

ஆயி ரங்கால் இருந்துமே
அதற்கு வேகம் இல்லையே !

கிட்டச் சென்றே அட்டையைத்
தொட்டுப் பார்த்தேன், நானுமே.

சட்டென் றந்த அட்டையும்
வட்ட மாகச் சுருண்டதே !

அம்மா செய்த முறுக்குப்போல்
அழகாய் அட்டை இருக்குது.

அழகாய் அட்டை இருக்குது;
அசைந்தி டாமல் கிடக்குது.

அம்மா செய்த முறுக்கையே
ஆசை யாகத் தின்னலாம்.

சும்மா கிடக்கும் அட்டையைச்
சுவைக்க யாரும் நினைப்பரோ ?

Scroll to Top