ஆண்எலியும் பெண்எலியும் #

ஆண்எலி ஒன்று, பெண்எலி ஒன்று
அன்பாய் வளையில் வசித்தனவே.

ஆண்எலி எதிரே, பெண்எலி எதிரே
அப்பம் பெரிதாய் இருந்ததுவே.

ஆண்எலி தின்றது, பெண்எலி தின்றது.
ஆயினும் ஆசை தீரவில்லை.

ஆண்எலி புகுந்தது, பெண்எலி புகுந்தது
அருகில் இருந்த வீட்டினிலே.

ஆண்எலி பார்த்தது, பெண்எலி பார்த்தது
அருமைப் பண்டம் பொறியினிலே.

ஆண்எலி பாய்ந்தது, பெண்எலி பாய்ந்தது
ஆசை தீரத் தின்றிடவே.

ஆண்எலி கேட்டது, பெண்எலி கேட்டது
அதிரும் சத்தம் பட்டெனவே.

ஆண்எலி திகைத்தது, பெண்எலி திகைத்தது
அந்தோ ! பொறியில் சிக்கினவே.

ஆண்எலி கதையும் பெண்எலி கதையும்
அப்புறம் அறியேன், அறியேனே !

கழுதையும் கட்டெறும்பும் #

கட்டெ றும்பு ஊர்ந்து ஊர்ந்து
கழுதை அருகில் சென்றதாம்.
கழுதை காலில் ஏறி ஏறிக்
காதுப் பக்கம் போனதாம்.

காதில் புகுந்து மெல்ல மெல்லக்
கடித்துக் கடித்துப் பார்த்ததாம்.
காள்கா ளென்று கழுதை கத்த
கட்டெ றும்பு மிரண்டதாம் !

காதி லிருந்து தரையை நோக்கிக்
கர்ணம் போட்டுக் குதித்ததாம்.
அந்தச் சமயம் பார்த்துக் கழுதை
அதன்மேல் காலை வைத்ததாம்.

காலில் சிக்கிக் கொண்ட எறும்பின்
கதை முடிந்து போனதாம் !

பொன்னைவிட உயர்ந்தது ? #

‘பொன்னை விட உயர்ந்தது
என்ன?’ என்ற கேள்வியை
சின்ன வயதில் காந்தியும்
தேர்வுத் தாளில் கண்டனர்.

‘பொன்னை விட உயர்ந்தது
உண்மை, உண்மை, உண்மைதான்’
என்ற பதிலை காந்தியும்
எழுதி னாரே மகிழ்வுடன்.

சின்ன வயதில் உண்மையின்
சிறப்பை உணர்ந்த காந்திதான்
பின்னர் உலகில் மிகமிகப்
பெரிய மனிதர் ஆயினார் !

கோழியின் பதில் #

இட்டு வைத்தேன் முட்டைகள்.
இட்ட முட்டை எட்டையும்
எடுத்துக் கொண்டான் ஒருவனே.

அவயங் காக்க நானுமே
ஆசை கொண்டேன்; ஆயினும்
அபயம் தந்த மனிதனே
அனைத்தும் தின்று தீர்த்தனன் !

குஞ்சு பொரித்துப் பார்க்கவே
கொண்டேன் ஆசை ; ஆயினும்
மிஞ்ச வில்லை முட்டைகள் ;
முழுதும் அவனே தின்றனன்.

எட்டு முட்டை தின்றவன்
என்னை என்ன செய்வனோ?
விட்டு வைக்க வேண்டுமே.
மிஞ்சு வேனோ நானுமே !

பாம்பைக் கொன்ற வீரன் ! #

சாலிக் கிராமம் அருகிலே
சைக்கிள் ஓட்டிச் செல்கையில்,
நாலு மீட்டர் இருக்கலாம்;
நடுவே பாம்பு கிடந்தது.

அஞ்ச வில்லை நானுமே;
அலற வில்லை நானுமே;
கொஞ்ச மேனும் தயக்கமும்
கொள்ள வில்லை நானுமே.

நிலவின் ஒளியில் வேகமாய்
நேராய் எனது சைக்கிளைத்
தலையைப் பார்த்து ஏற்றினேன்;
‘சட்னி’ என்றே எண்ணினேன்.

சிறிது தூரம் சென்றதும்,
திரும்பிப் பார்த்தேன் நானுமே.
சிறுவர் இருவர் என்னிடம்
சிரித்துக் கொண்டே வந்தனர்.

“உண்மைப் பாம்பு என்றுநீ
ஓலைப் பாம்பை எண்ணினாய்.
நன்கு வீரம் காட்டினாய்,
நண்பா” என்றே நகைத்தனர்.

மனிதனும் தேனீயும் #

மனிதன் :
தேடிச் சென்று பூவிலே
தேனை எடுக்கும் ஈயே வா.
ஜாடி நிறையத் தேனையே
தருவேன்; குடித்துச் செல்லுவாய்.

தேனீ :
என்னைப் போலத் தினம்தினம்
ஈக்கள் தேனை எடுத்தன.
கொண்டு வந்து கவனமாய்க்
கூட்டில் சேர்த்து வைத்தன.

கூட்டைக் கலைத்தே ஈக்களைக்
கொன்று விட்டுத் தேனையே
வீட்டில் சேர்த்து வைக்கிறீர்.
விருந்து தரவா அழைக்கிறீர் ?

எத்திப் பிழைக்க நானுமே
எண்ண மாட்டேன். ஆதலால்,
புத்தம் புதிய தேனையே
பூவில் எடுக்கப் போகிறேன்.

கிட்டுவின் கீர்த்தி #

பட்டம் ஒன்றைப் பெரியதாய்க்
கட்டி அதனின் நடுவிலே
கொட்டை எழுத்தில் என்பெயர்
பட்டை அடித்து எழுதினேன்.

வெட்ட வெளியில் நின்றுநான்
விட்டேன் நூலில் கட்டியே.
வெட்டி வெட்டி இழுக்கவே
பட்டம் மேலே சென்றதே !

எட்டி வானைத் தொட்டிடும்
இன்ப மான வேளையில்,
பட்டென் றந்த நூலுமே
நட்ட நடுவில் அறுந்ததே !

கட்ட விழ்ந்த காளைபோல்
காற்ற டித்த திசையிலே
பட்டம் பறந்து சென்றதே!
விட்டுத் திரும்ப முடியுமோ?

முட்டு கின்ற மூச்சுடன்
குட்டி மான்போல் ஓடினேன்.
எட்டி டாத தொலைவிலே
ஏய்த்துப் பறந்து சென்றதே !

பட்ட ணத்தை நோக்கிஎன்
பட்டம் பறந்து செல்லுமே.
எட்டு மாடி உள்ளதோர்
கட்ட டத்தில் இறங்குமே !

பட்ட ணத்தில் உள்ளவர்
பலரும் இதனைக் காணுவர்;
வட்ட மாகக் கூடுவர்;
மகிழ்ச்சி யோடு நெருங்குவர்.

பட்டம் நடுவே பெரியதாய்க்
கொட்டை எழுத்தில் என்பெயர்
‘கிட்டு’ என்றே தெரிந்திடும்.
கீர்த்தி அதனால் பெருகிடும் !

வாழைப் பழத்தின் மகிழ்ச்சி #

ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு
அவற்றுடன் என்னை வைத்தார்கள்.
‘சாப்பிடு வீர்’ என வந்தவர்முன்
தட்டில் வைத்துக் கொடுத்தார்கள்.

வந்தவர் மிகவும் பணக்காரர்.
“வயிற்றில் இல்லை இடம்” என்றார்.
“இந்தப் பைக்குள் வைக்கின்றோம்,
எடுத்துக் காரில் சென்றிடலாம்.”

என்றதும் பையுடன் பணக்காரர்
ஏறினர் தமது காரினிலே.
சென்றிடும் வழியில் திராட்சையுடன்
தின்றனர் ஆப்பிள், ஆரஞ்சை.

‘வாழைப் பழத்தை என்னுடைய
வாழ்க்கையில் தின்றதே இல்லை. இது
ஏழைகள் தின்னும் பழம்’ என்றே
எறிந்தார் என்னைச் சாலையிலே.

காலையில் இருந்து மாலைவரை
கடும்பசி யாலே துடிதுடித்துச்
சாலையில் நின்ற ஒருசிறுவன்
சட்டென என்னைப் பிடித்தானே !

ஏழைச் சிறுவன் பசிதீர்த்தே
இன்பம் மிகமிக நான்பெறுவேன்.
வாழை மரமாம் என் அம்மா
மனசு குளிரச் செய்வேனே!

நாயும் நிலவும் #

வட்ட மான வெண்ணி லாவைப்
பார்த்துப் பார்த்துமே
வள்வள் ளென்று எங்கள் வீட்டு
நாய் குரைத்தது.
கிட்டச் சென்றே என்ன சொல்லிக்
குரைக்கு தென்றுநான்
கேட்டு வந்தேன்; அந்தச் செய்தி
கூறப் போகிறேன்:

நிலாவிடம் நாய் சொன்னது:

அமா வாசை இருட்டிலே
ஆகா யத்தில் தேடினேன்.

எங்கே போனாய்? நிலவேநீ
எவரைக் கண்டே அஞ்சினாய்?

அமா வாசை நாளிலே
அண்டங் காக்கை இருளிலே

திருட்டு முனியன் பூனைபோல்
தெருவில் நடந்து வந்தனன்.

பார்த்து விட்டேன் நானுமே.
பாய்ந்தேன் அந்த நிமிடமே.

கோபக் குரலில் கத்தினேன்;
குரைத்துக் கொண்டே துரத்தினேன்.

என்னைப் பார்த்துத் திருடனும்
எடுத்தான் ஓட்டம் வேகமாய்.

தலை தெறிக்க ஓடியே
தப்பிப் பிழைத்து விட்டனன்.

ஆனை போல உருவமும்
ஆட்டுக் கடா மீசையும்

கோவைப் பழத்துக் கண்களும்
கொண்ட திருடன் முனியனைப்

பார்த்துத் தானே நீயுமே
பயந்தே ஓடிப் பதுங்கினாய்?

அமா வாசை இருளிலே
அஞ்சி ஓடி ஒளிந்தநீ

திருடன் போன மறுதினம்
சிறிதே தலையை நீட்டினாய்.

மெல்ல மெல்லத் தினமுமே
வெளியே எட்டிப் பார்த்தநீ

திருடன் இல்லை என்பதைத்
தெரிந்து கொண்டாய் இன்றுதான்.

வாரம் இரண்டு ஆனபின்
வந்து முழுசாய் நிற்கிறாய்.

ஏனோ என்னைப் பார்த்துநீ
இளப்ப மாகச் சிரிக்கிறாய்?

உறுதி! உறுதி! உறுதி! #

உண்மை பேச நானுமே
உறுதி கொண்டேன். ஆயினும்
சின்னச் சின்னப் பொய்களைத்
தினமும் ஏனோ சொல்கிறேன்.

“என்றன் மாமா லண்டனில்
இருக்கி றாரே, தெரியுமா?”
என்று நானும் புளுகுவேன்.
இதிலே பெருமை கொள்ளுவேன்.

நல்ல பாம்பு, பாம்பென
நண்பர் கூடி இருக்கையில்
சொல்வேன். அவர்கள் யாவரும்
துடித்தே ஓட மகிழுவேன்.

கவனக் குறைவால் நானுமே
கண்ணா டியை உடைத்தபின்
தவறு தங்கை செய்ததாய்த்
தந்தை யிடத்தில் கூறுவேன்.

எனக்குப் படிப்பில் போட்டியாய்
இருக்கும் கோபு, முரளியின்
கணக்கைக் காப்பி அடித்ததாய்க்
கதையும் கட்டி விடுகிறேன்.

அன்னை தூங்கும் வேளையில்
ஆசை யாக லட்டையே
தின்று விட்டு யார்அந்தத்
திருடன் என்று தேடுவேன்.

ஃ ஃ ஃ

தினம் தினம் இப்படி நான்சொன்ன
சிறுசிறு பொய்கள் எத்தனையோ?
கணக்கே இல்லை. இதற்கெல்லாம்
காரணம் என்ன? நானறிவேன்.

பெருமைக் காகப் பொய்சொன்னேன்.
பிறரை ஏய்க்கப் பொய்சொன்னேன்.

அடிக்குப் பயந்து பொய்சொன்னேன்.
ஆத்திரத் தாலே பொய்சொன்னேன்.

ஆசையி னாலும் பொய்சொன்னேன்.
ஐயோ! தினமும் பொய்சொன்னேன்.
ஃ ஃ ஃ

இப்படித் தினம்தினம் பொய்சொன்னால்
எவர்தான் என்னை நம்பிடுவார்?
தப்பிதம் அன்றோ? இதைநானும்
சரியாய் உணர்ந்தேன். எப்பொழுது?

காந்தித் தாத்தா வரலாற்றைக்
கருத்துடன் இன்று படிக்கையிலே,

உண்மை ஒன்றே இவ்வுலகில்
உயர்ந்தது, மிகவும் உயர்ந்ததென

உணர்ந்தேன். இனிமேல் எப்பொழுதும்
உத்தமர் காந்தி வழிநடப்பேன்.

சோதனை பற்பல தோன்றிடினும்,
தொல்லைகள் தொடர்ந்து வந்திடினும்

உண்மை ஒன்றே பேசிடுவேன்.
உறுதி, உறுதி, உறுதி இது !

நடந்து போன நாற்காலி ! #

இரண்டு கால்கள் உள்ள மனிதர்

இங்கும் அங்கும் நடக்கிறார்.
ஏணி மேலே காலை வைத்தே
ஏறி ஏறிச் செல்கிறார்.

குறுக்கே பள்ளம் இருந்தால் உடனே
குதித்துத் தாவிக் கடக்கிறார்.
குடுகு டென்று வேக மாகக்
குதிரை போலச் செல்கிறார்.

இரண்டு கால்கள் உள்ள மனிதர்
இவற்றை யெல்லாம் செய்கையில்
இரண்டு மடங்கு கால்கள் எனக்கு
இருந்தும் சும்மா இருப்பதோ?

இருந்த இடத்தில் இருந்து இருந்து
எனக்குச் சலித்துப் போனதே.
இன்றே நானும் மனிதர் போலே
எங்கும் நடந்து செல்லுவேன்.

இப்படி –

நான்கு கால்கள் கொண்டஒரு
நாற்கா லியுமே நினைத்ததுவே.

நகர்ந்து நகர்ந்து சென்றதுவே;
நலமாய் முகப்பை அடைந்ததுவே.

எட்டுப் படிகள் வாசலிலே
இருந்தன. அவற்றில் இறங்கிடவே

முன்னங் கால்கள் இரண்டையுமே
முதலாம் படியில் வைத்ததுவே.

மடித்துக் காலை வைக்காமல்
வாயிற் படியில் இறங்கியதால்

அடுத்த நிமிடம் தடதடென
அங்கே சத்தம் கேட்டதுவே.

உருண்டு விழுந்தது நாற்காலி !
ஒடிந்தன மூன்று கால்களுமே !

மிச்சம் ஒற்றைக் காலுடனே
முடமாய்க் கிடந்தது நாற்காலி.

நடக்கும் முன்னே நாற்காலி.
நடந்த பிறகோ ஒருகாலி !

இருந்த இடத்தில் இருந்திருந்தால்
இன்னும் அதன்பெயர் நாற்காலி !

பச்சைக் கண்ணன் #

சீனி மிட்டாய்க் கடையிலே
சின்னச் சின்னப் பொம்மைகள்.
சின்னச் சின்னப் பொம்மைகள்
சீனி மிட்டாய்ப் பொம்மைகள்.

கண்ணன் பொம்மை இருந்தது.
காந்தி பொம்மை இருந்தது.
வண்ண வண்ணப் பொம்மைகள்
வரிசை யாக இருந்தன.

காசு கொடுத்து நானுமே
கண்ணன் பொம்மை வாங்கினேன்.
ஆசை யாக எனதுவாய்
அருகில் கொண்டு போயினேன்.

பச்சை நிறத்துக் கண்ணனோ
பார்க்க அழகாய் இருந்ததால்
எச்சில் படுத்தித் தின்னவே
எனக்கு விருப்பம் இல்லையே!

அறையில் மாடம் இருந்தது.
அதிலே வைத்தேன், கண்ணனை!
உறங்கிப் போனேன், இரவிலே.
ஒன்றும் அறியேன் நானுமே.

காலை எழுந்து பார்க்கையில்
காண வில்லை கண்ணனை.
நாலு புறமும் வீட்டினுள்
நன்கு நானும் தேடினேன்.

அப்பா வந்தார்; கூறினேன்.
அவரும் தேடிப் பார்த்தனர்.
அப்போ தவரின் கண்களோ
அறையின் ஓரம் பார்த்தன.

ஓர மாகச் சென்றுநான்
உற்றுப் பார்த்தேன் அவருடன்.
சாரை சாரை யாகவே
தரையில் கண்டேன், எறும்புகள்.

பச்சை நிறத்துக் கண்ணனைப்
பங்கு போட்டே எறும்புகள்
இச்சை யோடு வாயிலே
எடுத்துக் கொண்டு சென்றன.

நான் :
கண்ணன் பொம்மை முழுவதும்
கடித்துக் கடித்தே எறும்புகள்
கொண்டு செல்லு கின்றன.
கொடுமை கொடுமை, கொடுமையே !

அப்பா :
பச்சைக் கண்ணன் இவைகளின்
பசியைப் போக்கத் தன்னையே
மிச்ச மின்றி உதவினன்.
வீணில் வருத்தம் கொள்வதேன்?

பல்லில்லாத பாட்டி #

பல்லில் லாத பாட்டிக்குப்
பத்துப் பேரப் பிள்ளைகள்.
எல்லாப் பேரப் பிள்ளையும்
எதிரே ஒருநாள் வந்தனர்.

“பத்துப் பத்துச் சீடைகள்
பாட்டி உனக்கே” என்றனர்.
மொத்தம் நூறு சீடைகள்
முன்னே வைத்துச் சென்றனர்.

ஏக்கத் தோடு பாட்டியும்
எதிரே இருந்த சீடையைப்
பார்க்க வில்லை; சிரித்தனள்;
பைய எழுந்து நின்றனள்.

சின்னத் தூக்கு ஒன்றிலே
சீடை யாவும் வைத்தனள்.
என்ன செய்தாள், தெரியுமா?
எடுத்துச் சொல்வேன், கேளுங்கள்;

தடியை ஊன்றி ஊன்றியே
தன்னந் தனியாய்ப் பாட்டியும்
நடந்து நடந்து சென்றனள்;
நான்கு தெருவைக் கடந்தனள்.

மாவு அரைக்கும் ஓரிடம்
வந்த பிறகே நின்றனள்.
ஆவ லாக நுழைந்தனள்;
“அரைத்துக் கொடுப்பீர்” என்றனள்.

உருண்டைச் சீடை யாவுமே
உடைந்து நொறுங்கிக் கடைசியில்
அருமை மாவாய் மாறின.
ஆஹா ! பாட்டி மகிழ்ந்தனள்.

வீடு வந்து சேர்ந்தனள்
வேக மாகப் பாட்டியும்.
சீடை மாவில் நெய்யுடன்
சீனி சேர்த்துப் பிசைந்தனள்.

தின்னப் போகும் வேளையில்
சேர்ந்து பேரப் பிள்ளைகள்
முன்னே வந்து நின்றனர்.
“என்ன பாட்டி?” என்றனர்.

பாட்டி சீடை மாவினைப்
பத்துப் பேரப் பிள்ளைக்கும்
ஊட்டி ஊட்டி விட்டனள்;
ஒருவாய் அவளும் உண்டனள் !

எட்டுக் கோழிக் குஞ்சுகள் #

எட்டுக் கோழிக் குஞ்சுகள்
இரையைத் தேடிச் சென்றன.
குட்டை யாக ஒருபுழு
குறுக்கே செல்லக் கண்டன.

பார்த்த வுடனே எட்டுமே
பாய்ந்து கொல்ல முயன்றன.
யார்தான் புழுவைத் தின்பது?
என்று சண்டை போட்டன.

சிறகை அடித்துக் கொண்டன;
சீறித் தாவிக் கொத்தின;
குரலைக் காட்டி வேகமாய்க்
கோபத் தோடு கூவின.

அம்மாக் கோழி குரலுமே
அந்தச் சமயம் கேட்கவே,
வம்புச் சண்டை நிறுத்தின.
மனத்தைக் கட்டுப் படுத்தின.

சண்டை ஓய்ந்து போனதும்
தரையைக் கூர்ந்து நோக்கின.
கண்ணில் அந்தப் புழுவையே
காண வில்லை; இல்லையே !

சண்டை முடியும் வரையிலும்
சாவ தற்கு நிற்குமோ ?
மண்டு அல்ல அப்புழு.
மகிழ்ந்து தப்பி விட்டதே!

நன்றி #

மாட்டு வண்டி ஒன்றில் கறுப்பன்
மூட்டை ஏற்றிச் சென்றான்.
மேட்டில் வண்டி ஏறும் போது
மூட்டை விழவே நின்றான்.

உருளைக் கிழங்கு மூட்டை அதனை
ஒருவ னாகத் தூக்கப்,
பெரிதும் கறுப்பன் முயன்ற போது
பெரியார் ஒருவர் வந்தார்.

“இருவர் நாமும் சேர்ந்தால் இதனை
எளிதில் தூக்க முடியும்.
சிரமம் இன்றி இருந்த இடத்தில்
திரும்ப வைத்து விடலாம்”

பெரியார் இதனைக் கூறிவிட்டுப்
பெரிய மூட்டை அதனைக்
கறுப்ப னோடு சேர்ந்து தூக்கிக்
கட்டை வண்டி சேர்த்தார்.

“இந்த ஏழை சிரமம் தீர்க்க
இனிய உதவி செய்தீர்.
எந்த வகையில் நன்றி சொல்வேன்?”
என்று கறுப்பன் கூற,

“வாயால் நன்றி கூற வேண்டாம்.
மகிழ்ச்சி யோடு பிறர்க்கு
நீயும் உதவி செய்தால் எனது
நெஞ்சு குளிரும்” என்றார்.

கழுகுக் காட்சி #

திருக்கழுக் குன்ற மலையினிலே
தினமும் உச்சி வேளையிலே
அருமைக் காட்சி கண்டிடவே
அங்கே மக்கள் கூடுவரே.

வானை நிமிர்ந்து பார்த்திடுவர்;
வருகை தன்னை நோக்கிடுவர்;
ஏனோ இன்னும் வரவில்லை?
என்றே சிலரும் ஏங்கிடுவர்.

சட்டென வானில் இருகழுகு
வட்டம் போடும் காட்சியினைச்
சுட்டிக் காட்டுவர் சிலபேர்கள்.
துள்ளிச் சிறுவர் குதித்திடுவர்.

வட்டம் போட்ட கழுகுகளும்
வருமே மெதுவாய்க் கீழிறங்கி.
தட்டுடன் அமர்ந்த குருக்களிடம்
தாவித் தாவிச் சென்றிடுமே.

நெய்யும் சர்க்கரைப் பொங்கலுமே
நீட்டிடு வாரே குருக்களுமே.
கையால் அவரும் ஊட்டிடவே
கழுகுகள் உண்டு களித்திடுமே.

உச்சி வேளையில் தினந்தோறும்
ஒழுங்காய்க் கழுகுகள் வருவதையும்
அச்சம் இன்றி உணவருந்தி
அவைகள் பறந்து செல்வதையும்

பற்பல ஆண்டாய் இம்மலையில்
பார்த்தே வருவார் மக்களுமே.
அற்புதக் காட்சி இதைநானும்
அடடா, கண்டேன், கண்டேன் !

விடுதலை #

வாட்ட மாகக் கூட்டில் இருந்த
வண்ணக் கிளியைக் காலையில்
கூட்டைத் திறந்து வெளியில் விட்டேன்
குதூக லமாய்ப் பறந்ததே!
விடுதலை ! விடுதலை ! விடுதலை !

கழுத்து நோக இரவு முழுதும்
கட்டிக் கிடந்த கன்றினை
அவிழ்த்து விட்டேன்; விடிந்த வுடனே
ஆனந் தமாய்க் குதித்ததே !
விடுதலை ! விடுதலை ! விடுதலை !

தொட்டிக் குள்ளே நீந்தி நீந்திச்
சோர்ந்து போன மீன்களை
விட்டு வந்தேன் ஆற்று நீரில்
விரைந்து நீ்ந்தி மகிழவே!
விடுதலை ! விடுதலை ! விடுதலை !

முன்பு ஒருநாள் பிடித்து வந்த
மின்னி டும்பொன் வண்டினை
கொன்றை மரத்தில் காலை நேரம்
கொண்டு சேர்த்தேன் மீண்டுமே!
விடுதலை ! விடுதலை ! விடுதலை !

சுதந்தி ரத்தை நாம் அடைந்த
தூய்மை யான நாளிலே
உதவி செய்தேன்; அதனை எண்ணி
உள்ளம் துள்ளு கின்றதே!
விடுதலை ! விடுதலை ! விடுதலை !

கடலும் மழைத்துளிகளும் #

கடல் :

மழைத் துளிகாள், மழைத் துளிகாள்,
என்னி டத்திலே
வந்து நீங்கள் சேர்ந்த தாலே
மகிமை பெறுகிறீர்.

அழகு, ஆழம், அகலம், நீளம்
என்னைப் போலவே
யாரி டத்தில் உண்டு? நீங்கள்
கூற முடியுமோ?

மழைத் துளிகள்:

ஆறு, ஏரி, குளங்க ளெல்லாம்
அளவில் சிறியவை.
ஆன போதும் அவற்றில் சேர்ந்தால்
அதிகம் மகிழுவோம்.

ஊரில் உள்ளோர் தாகம் தீர
உதவி செய்யலாம்.
உப்புக் கரிக்கு தென்று சொல்லித்
துப்பு வார்களோ?

அவர்கள் தந்த மரம் #

காகம் ஒன்று ஆல மரத்தில்
வந்து அமர்ந்தது.
கனிந்து சிவந்த பழங்கள் தம்மைக்
கொத்தித் தின்றது.

வேக மாகச் சிறக டித்துப்
பறந்து சென்றது.
வெட்டவெளியில் ஓரி டத்தில்
எச்ச மிட்டது.

எச்சத் துடனே தரையில் வீழ்ந்த
ஆலம் விதைகளில்
இரண்டு வாரம் சென்ற பின்னர்
ஒன்று முளைத்தது.
உச்சி வெய்யில் தலையில் விழவே
நடந்து சென்றவர்
ஒருவர் அந்தச் செடியைக் கண்டே
உள்ளம் மகிழ்ந்தனர்.

ஆடு மாடு கடித்தி டாமல்
வேலி போட்டனர்.
அவரே தினமும் மாலை நேரம்
தண்ணீர் விட்டனர்.
பாடு பட்டே அந்தச் செடியை
வளர்த்து வந்ததால்
பத்தே ஆண்டில் பெரிய மரமாய்
வளர்ந்து விட்டது.

கோடை நாளில் குடையைப் போல
நிழலைத் தந்திடும்.
கூட்டம் நடத்த மண்ட பம்போல்
என்றும் உதவிடும்.
ஆடிப் பாடச் சிறுவ ருக்கும்
அரங்க மாகிடும்.
அருமை யான ஊஞ்ச லாக
விழுது மாறிடும்.

சின்ன விழுது பல்து லக்கத்
தினமும் உதவிடும்.
தேடி வந்து பறவை யெல்லாம்
கூடு கட்டிடும்.
இன்னும் நூறு, நூறு விதத்தில்
நன்மை செய்திடும்
இந்த மரத்தின் பெருமை கூற
எவரால் முடிந்திடும் ?

விதையைப் போட்டுச் சென்ற காகம்
எங்கு திரியுமோ?
வேலி போட்டு வளர்த்த மனிதர்
எங்கு வாழ்வரோ?
உதவி பலவும் செய்யும் மரத்தை
நமக்குத் தந்தவர்
உலகில் எங்கே இருந்த போதும்
வாழ்க, வாழ்கவே !

எது சுதந்திரம் ? #

ஒன்பது மணிவரை படுக்கையில் கிடந்தே
உறங்கிடும் பொன்னனை எழுப்பினள் அம்மா.
“இன்றுநம் தேசச் சுதந்திரத் திருநாள்.
எழுந்திரு சீக்கிரம்” என்றனள் அம்மா.

“சுதந்திர நாளில் சுகமாய்த் தூங்கச்
சுதந்திரம் உண்டு. சும்மா போபோ.
மதியம் வரைநான் தூங்கிடு வேன்” என
மறுபுறம் திரும்பிப் பொன்னன் படுத்தான்.

பதினொரு மணிவரை தூங்கிடும் பொன்னனைப்
பார்த்ததும் தந்தை ஆத்திரம் கொண்டார்.
முதுகினில் இரண்டு பலமாய் வைத்தார்.
முணுமுணுத் தவனும் துள்ளி எழுந்தான்.

“அன்னையும் தந்தையும் சுதந்திர நாளில்
அடிமைபோல் என்னை நடத்திடு கின்றார்.
இன்றுநான் என்றன் இஷ்டம் போலவே
எதனையும் செய்வேன்” என்று நினைத்தான்.

கல்லை எடுத்தான்; கருநிற நாயின்
கால்களைப் பார்த்துக் குறிவைத் தெறிந்தான்.
‘ளொள்’என நாயும் சீறிப் பாய்ந்திட
நொடியில் பொன்னன் ஓடி ஒளிந்தான்.

சாலையில் கைகளை வீசி நடந்தான்;
தனக்கே சுதந்திரம் என்றவன் நினைத்தான்;
மாலையில் கார்கள், வண்டிகள் வந்தும்
வழிவிட வில்லை; எதிரில் நடந்தான்.

சட்டென ஒருகார் அவன்மேல் மோத,
தாவிக் குதித்தவன் தவறி விழுந்தான்.
பட்டெனத் தலையில் அடிபட லாச்சே!
பந்துபோல் நெற்றியும் புடைத்திட லாச்சே!

சுதந்திர நாளில் நினைத்ததைச் செய்வதே
சுதந்திரம் என்று பொன்னன் நினைத்தான்.
விதம்வித மான தொல்லைகள் வரவே
மெத்தவும் மனத்தில் வேதனை அடைந்தான்.

சோம்பிக் கிடைப்பது சுதந்திரம் இல்லை.
தொல்லைகள் தருவதும் சுதந்திரம் இல்லை.
வீம்புகள் செய்வதும் சுதந்திரம் இல்லை.
வேறெது உண்மைச் சுதந்திரம் ஆகும் ?

பிறரது உரிமையை மதிப்பது சுதந்திரம்.
பேச்சிலும் செயலிலும் தூய்மையே சுதந்திரம்.
உரிமையும், கடமையும் ஒன்றாய்ச் சேர்வதே
உண்மையில் சுதந்திரம், சுதந்திரமாகும் !

கந்தனின் மாடு #

மாட்டு வண்டி ஒன்றிலே
மூட்டை நெல்லை ஏற்றியே
காட்டு வழியாய்ச் சென்றனன்
கந்தன் என்னும் நல்லவன்.

ஒற்றை மாட்டு வண்டியை
ஓட்டி அவனும் செல்கையில்
சட்டென் றெதிரே வேகமாய்த்
தாவி வந்தான் திருடனே !

“மாட்டை இழுத்து நிறுத்திடு.
வண்டிக் குள்ளே இருந்திடும்
மூட்டை நெல்லை இறக்கிடு”
மிரட்ட லானான் திருடனும்.

“என்னை நம்பி மூட்டையை
ஏற்றி ஒருவன் அனுப்பினார்.
என்ன சொல்வேன் அவரிடம்?”
என்றே கந்தன் கலங்கினான்.

கத்தி ஒன்றைக் காட்டியே
“குத்திக் கொன்று போடுவேன்.
செத்துப் போக ஆசையா?”
திருடன் மேலும் மிரட்டினான்.

எந்தப் பேச்சும் பயனில்லை
என்ப தறிந்த கந்தனும்
தந்தி ரத்தின் உதவியால்
தப்பிப் பிழைக்க எண்ணினான்.

“கொண்டு வந்த நெல்லுமே
கொள்ளை போன தென்றுநான்
சொன்னால் ஊரார் நம்பிடார்.
தொழிலும் கெட்டுப் போகுமே!

மூட்டை நெல்லைத் தந்திட
முடிய வில்லை. ஆதலால்
மாட்டை அவிழ்த்துத் தருகிறேன்.
மகிழ்ச்சி யோடு சென்றிடு.

இந்த மாடு என்றனின்
சொந்த மாடு. ஆதலால்
என்றன் உயிரைக் காக்கவே
இதனைத் தருவேன்” என்றனன்.

மூட்டை விலையைப் போலவே
மூன்று மடங்கு இருந்திடும்
மாட்டைப் பெற்றுக் கொள்ளவே
மனம் இசைந்தான் திருடனே.

கந்தன் மாட்டை அவிழ்த்தனன்;
கள்ளன் கையில் கொடுத்தனன்.
அந்த மாடோ புதியவர்
அருகில் வந்தால் பாயுமே !

ஆர்வ மாகத் திருடனும்
அதனைத் தட்டிக் கொடுக்கவே,
கூர்மை யான கொம்பினால்
குத்தித் தொடையைக் கிழித்தது!

தொடையி லிருந்து ரத்தமும்
கொடகொ டென்று கொட்டவே
உடனே பயந்து திருடனும்
ஓட்ட மாக ஓடினான்.

‘ஐயோ! அப்பா!’ என்றவன்
அலறிக் கொண்டே வேகமாய்க்
கையைக் காலை உதறியே
காட்டுக் குள்ளே ஓடினான்.

கந்தன் மாடு துரத்தவே,
கதறித் திருடன் ஓடவே,
கந்தன் அந்தக் காட்சியைக்
கண்டு கண்டு சிரித்தனன்!

அழுத பிள்ளை சிரித்தது ! #

சின்னச் சின்ன அழகுப் பாப்பா
எங்கள் தம்பியாம்.
சிரித்துச் சிரித்து மகிழ்ச்சி யூட்டும்
எங்கள் தம்பியாம்.
அன்று நல்ல நிலவு தன்னில்
திறந்த வெளியிலே
அழகுத் தொட்டில் அதனில் தம்பி
படுத்தி ருந்தனன்.

சிரித்துக் கொண்டே இருந்த எங்கள்
சின்னத் தம்பியும்
திடுதிப் பென்று குரலெடுத்துக்
கதற லாயினன்!
அருமைத் தம்பி வீல்வீ லென்றே
அழுத காரணம்
அறிந்தி டாமல் ஐந்து நிமிடம்
விழிக்க லாயினேன்.

சிறிது நேரம் அழுத பின்னர்
எங்கள் தம்பியோ
சிரித்துக் கொண்டே கையை மேலே
காட்ட லாயினன்.
அருமை யாகக் காட்டு கின்ற
பொருளைக் கண்டதும்
அறிந்து கொண்டேன் கார ணத்தை
அந்தச் சமயமே.

என்ன அந்தக் கார ணம்தான்
என்றா கேட்கிறீர்?
எடுத்து நானும் கூறு கின்றேன்;
கேட்டுக் கொள்ளுவீர்.
சின்னத் தம்பி படுத்துக் கொண்டு
மேலே பார்க்கையில்
தெரிந்த தங்கே முழுமை யான
வெண்ணி லாவுமே!

அழகு மிக்க நிலவைக் கண்டு
மகிழும் வேளையில்
அங்கே வந்த மேகக் கூட்டம்
அதை மறைத்ததால்,
அழுது விட்டான் சின்னத் தம்பி
ஏங்கி ஏங்கியே!
அழுத பிள்ளை சிரித்த தேனோ?
அதையும் சொல்லுவேன்;

மறைந்தி ருந்த மேகம் பின்னர்
கலைந்து போனதால்
வானில் நிலா முன்பு போலத்
தெரிய லானது!
மறைந்த நிலவை வானில் மீண்டும்
கண்ட தம்பியின்
மறைந்த சிரிப்பும் நிலவைப் போலத்
திரும்பி வந்ததே!

ராஜாஜியும் சிறுவனும் #

கல்கத் தாவில் ராஜாஜி
கவர்ன ரானபின்
களிப்பை ஊட்டும் செய்தி யொன்று
வெளியில் வந்ததே.
நல்ல அந்தச் செய்தி தன்னை
உங்க ளிடத்திலே
நானிப் போது கூற வந்தேன்;
கேளும் நண்பரே !

சிறுவர் தம்மை மாளி கைக்கு
அவர் அழைத்தனர்.
தித்திப் பான பண்டத் தோடு
விருந்து வைத்தனர்.
விருந்து கவர்னர் அளித்த தாலே
பெருமை கொண்டனர்;
மிக்க மகிழ்ச்சி யோடு சிறுவர்
உண்ண லாயினர்.

அந்தச் சமயம் ராஜாஜி,
சிறுவன் ஒருவனின்
அருகில் சென்று சிரித்துக் கொண்டே
காதைப் பிடித்தனர்.
“உன்றன் காதைப் பிடித்து நானும்
முறுக்கும் போதிலே
உனது மனத்தில் இதனைப் பற்றி
என்ன நினைக்கிறாய்?

அகிம்சை என்று இதனை நீயும்
கருது கின்றாயா?
அன்றி இம்சை என்றே இதனைக்
கூறு கின்றாயா?”
மகிமை மி்க்க தலைவர் இதனைக்
கேட்ட வுடனேயே
மகிழ்ச்சி மிகவும் கொண்ட சிறுவன்
கூற லாயினன்:

“அகிம்சை இல்லை; இம்சை இல்லை;
தாங்கள் காட்டிடும்
அன்பு, அன்பு, அன்பு” என்றே
அவன் உரைத்தனன்.
மிகவும் மகிழ்ச்சி கொண்ட தலைவர்
அவனை மெச்சினார்.
விவரம் அறிந்த சிறுவர் அங்கே
சிரிக்க லாயினர்.

லண்டனில் தீபாவளி #

லண்டனில் இந்திய மாணவர்கள்-மிக
நன்றாகத் தீபா வளிதினத்தைக்
கொண்டாடத் திட்டங்கள் போட்டனரே-ஒன்று
கூடிநல் ஏற்பாடு செய்தனரே !

பண்டிகை கொண்டாட வேண்டுமெனில்-அங்கே
பலமாய் விருந்து வேண்டுமன்றோ?
ஒன்றாகச் சேர்ந்து மாணவர்கள்-மிக
உற்சாக மாகச் சமைத்தனரே.

அந்தச் சமயத்தில் அவ்விடத்தே-ஓர்
அப்பாவி இந்தியர் வந்தடைந்தார்.
வந்தவர் யார்என ஒருவருமே-அந்த
மாணவர் கூட்டத்தில் கேட்கவில்லை.

ஏதும் விசாரணை செய்யவில்லை-ஆனால்,
ஏவினர் வேலைகள் செய்திடவே.
சாதுவாம் அந்த மனிதருமே-சற்றும்
தயங்கிட வேண்டுமே! இல்லை, இல்லை!

பாத்திரம் தேய்த்தனர்; பற்றுத் துலக்கினர்;
பம்பர மாய்வேலை செய்தனரே.
வேர்த்து விறுவிறுத் தேஅவரும்-பல
வேலைகள் செய்திடும் வேளையிலே,

வ.வே.சு. ஐயர் எனும்பெரியார்-அங்கு
வந்தனர்; சுற்றிலும் பார்த்தனரே.
ஏவல் புரியும் மனிதரைக் கண்டதும்
ஏனோ துடியாய்த் துடித்தனரே.

“அடடே, இவர்தாம் காந்தி!” யென்றார்-“நம்
அருமை விருந்தினர் இவரே” என்றார்.
உடனே அனைவரும் மன்னிப்புக் கோரிட,
உத்தமர் காந்தி உரைத்திடுவார்:

“ஒன்றாகச் சேர்ந்து சமையல்செய்தோம்-இது
ஒற்றுமை தன்னையே காட்டுமன்றோ?
நன்றாய் உழைத்துநாம் உண்பதிலே-சற்றும்
நாணமே இல்லை; உணர்ந்திடுவோம் !”

சண்டையும் சமாதானமும் – நாட்டிய நாடகம் #

கமலா :

என்ன, என்ன, என்ன அதோ
சப்தம் கேட்குதே!-அடே,
எங்கள் வீட்டுத் தோட்டத் திலே
சப்தம் கேட்குதே!
சென்று நாமும் பார்த்து வரலாம்
வருவாய் தோழியே-என்ன
செய்தி என்றே அறிந்து வரலாம்
வருவாய் தோழியே!

விமலா :
வாய்தி றந்து ஏதோ வார்த்தை
சிரித்து வருகுது!

மல்லி கைப்பூ அதோ, அதோ
சொல்ல வருகுது!

மல்லிகைப் பூ :

மல்லி கைப்பூ என்ற வுடனே
மணம ணக்குமே.
மக்க ளுடைய உள்ள மெல்லாம்
மயங்கி நிற்குமே.
உள்ளம் குளிரப் பெண்கள் தலையில்
என்னை அணிவரே.
உருவம் சிறிதே ஆன போதும்
உயர்ந்த வள்நானே !

முத்து வடிவம் கொண்ட என்றன்
உடலைப் பாருங்கள்.
வெள்ளை உள்ளம் போன்ற என்றன்
நிறத்தைப் பாருங்கள்.
இத்த லத்தில் மலர்க ளுக்குள்
சிறப்பு மிக்கவள்
என்னைப் போல ஒருத்தி உண்டோ ?
இல்லை, இல்லையே !

கமலா :

குவிந்தி ருக்கும் தாம ரைப்பூ
அதோ வருகுது!
கோபு ரத்துக் கலசம் போல
அதோ வருகுது!

தாமரைப் பூ :

சின்னப் பூவே மல்லிகை,
என்ன பேச்சுப் பேசினாய்?
என்னைப் போல ஒருத்தியை
எண்ணிப் பார்க்க வில்லையோ?

தண்ணீர் மேலே நிற்பவன்
தட்டைப் போல விரிபவள்
கண்ணுக் கினிதாய்த் தெரிபவள்
கடவுள் பூசைக் குரியவள்!

சிறப்பு மிக்க கலைமகள்
செல்வம் நல்கும் திருமகள்
இருவர் என்மேல் இருப்பரே.
என்போல் உண்டோ சொல்லடி?

விமலா :

தங்க நிறத்து அரளி அதோ
குலுங்கி வருகுது !
சண்டை போடத் தானோ அதுவும்
நெருங்கி வருகுது?

அரளிப் பூ :

மல்லி கையே! தாமரையே!
என்ன சொன்னீர்கள்?
மனித ருக்கே நீங்கள் உதவும்
கதையைச் சொன்னீர்கள்.
எல்லாம் வல்ல இறைவ னுக்கும்
பூசை செய்யவே,
இந்த உலகில் நான் பிறந்தேன்;
தெரிந்து கொள்ளுங்கள்.

அங்கம் முழுதும் மஞ்சள் பூசி
நிற்கும் என்னையே
தங்க அரளி என்றே மக்கள்
புகழ்ந்து கூறுவார்.
இங்கே உள்ள மலர்க ளுக்குள்
நானே சிறந்தவள் !
எதிர்த்துப் பேச எவருக் கேனும்
துணிச்சல் உண்டோடி?

கமலா :

அதோ, அதோ சாமந்தியும்
அருகில் வருகுதே!
அதுவும் இந்தச் சண்டையிலே
குதிக்கப் போகுதோ?

சாமந்திப் பூ :

மல்லிகை, தாமரை, தங்கரளி –

உங்கள்
மகிமையைக் கேட்டுச் சலித்து

விட்டேன்.
இல்லாத நில்லாத பெருமை

யெல்லாம்-நீங்கள்
ஏனோதான் பேசி மகிழுகின்றீர்?

தங்கம் போல் நானும் நிறமுடையேன்-ஈசன்
தலையிலும் கழுத்திலும் விளங்கிடுவேன்.
மங்கல காரியம் யாவிலுமே-என்னை
மக்கள் மறப்பதே இல்லையடி.

ஓரிரு நாள்களே வாழுகின்றீர்-நீங்கள்
உடலெல்லாம் வாடி வதங்குகின்றீர்.
ஆறேழு நாள்களே ஆயிடினும்-மணம்
அள்ளிப் பரப்புவேன் நான்அறிவீர்.

என்னை விரும்பி அணிந்திடுவார்-மிக்க
ஏழை எளியவர் யாவருமே.
பொன்னொளி வீசிடும் என்னைவிட-இந்தப்
பூக்களில் சிறந்தவள் யாரடியோ?

விமலா :

ஆகா ! ஆகா ! அதோ பார்.
அழகு ரோஜா மலரைப் பார் !
வேக மில்லை, கோப மில்லை,
மெல்ல மெல்ல வருகுது பார்!

கமலா :
பட்டுப் போன்ற மலர்இது
பையப் பைய வருகுது.
தொட்டுப் பார்க்கும் ஆசையைத்
தூண்டு கின்ற மலர்இது!

விமலா :
மலர்க ளுக்குள் அரசியாய்,
மணம் பரப்பும் மலரிது!
உலக முழுதும் போற்றிடும்
உயர்ந்த ஜாதி மலரிது!

கமலா :
தெய்வத் திற்குச் சூட்டலாம்;
திரும ணத்தில் அணியலாம்;
கையில் ஏந்தி நுகரலாம்;
களிப்பை ஊட்டும் மலரிது!

விமலா :
நேரு வுக்குப் பிடித்தது;
நெஞ்ச மெல்லாம் கவர்ந்தது;
பாரில் இதனைப் போலவே
பார்த்த துண்டோ ஒருமலர்!

கமலா :
இல்லை இல்லை, ரோஜாவும்
ஏதோ பேசப் போகுதே!
விமலா :

நல்ல தைத்தான் பேசிடும்;
நாமும் அதனைக் கேட்கலாம்.

ரோஜாப் பூ :
அருமைப் பூவே, மல்லிகையே!
அழகுப் பூவே, தாமரையே!
பெருமை யூட்டும் தங்கரளி!
பிரிய மான சாமந்தியே!

உங்களின் சண்டையைப் பார்த்ததுமே-என்
உள்ளம் மிகமிக வாடியதே.
இங்குள நாமெல்லாம் ஓரினமே-இதை
ஏனோ மறந்தீர், தோழியரே?

வண்ணத்தில் வேற்றுமை இருந்திடினும்-நம்
வடிவத்தில் வேற்றுமை இருந்திடினும்
எண்ணத்தில் வேற்றுமை இல்லாமல்-நாம்
இணைந்து வாழுவோம் ஒற்றுமையாய்.

கண்டவர் உள்ளம் கவர்ந்திடவே-நல்ல
காட்சி அளித்து விளங்குகிறோம்.
வண்டுகள் வயிறார உண்டிடவே-நாம்
வாரித் தேனை வழங்குகிறோம்.

திருவிழா, திருமணம், பண்டிககைள்-எல்லாம்
சிறந்திட நாமும் உதவிடுவோம்.
நறுமணம் எங்கும் பரப்பிடுவோம்-என்றும்
நன்மைகள் செய்யவே நாம்பிறந்தோம்.

என்னை விரும்பி அணிபவராம்-நேரு
இந்திய நாட்டின் சுடர்மணியாம்!
சண்டை விரும்பாத உத்தமராம்-அவர்
சாந்த வழியிலே சென்றவராம்.
சாந்த வழியிலே சென்றவராம்-அந்தத்
தங்கத் தலைவரின் சொற்படிநாம்
சாந்த வழியிலே சென்றிடுவோம்-என்றும்
சாந்த வழியிலே சென்றிடுவோம்.

பூக்களின் குரல் :
சாந்த வழியிலே சென்றிடுவோம்-நாம்
சாந்த வழியிலே சென்றிடுவோம்.

கமலாவும் விமலாவும் :
– நாமும்
சாந்த வழியிலே சென்றிடுவோம்.
சாந்த வழியிலே சென்றிடுவோம்.
(பூக்களைத் தொடர்ந்து கமலாவும் விமலாவும் திரைக்குள்ளே போகிறார்கள்.)

Scroll to Top