யார்? யார்? யார்? #

தொங்க விட்ட சட்டையைத்
தூக்கிக் கீழே போட்டவன்
யார், யார், யார் ?

எழுதி வைத்த தாள்களை
இங்கும் அங்கும் இறைத்தவன்
யார், யார், யார் ?

சன்னல் கதவைப் பட்டெனச்
சாத்தி விட்டுச் சென்றவன்
யார், யார், யார் ?

அருகில் நிற்கும் மரங்களை
அசைத்தே ஆடச் செய்தவன்
யார், யார், யார் ?

‘உஸ் உஸ்’ என்று மெல்லவே
ஊதி ஊதிச் செல்பவன்
யார், யார், யார் ?

கண்டு பிடிக்க முடியுமா ?
காண முடியாக் காற்றேதான் !

நிலா நிலா #

‘நிலா, நிலா, ஓடிவா.
நில்லாமல் ஓடிவா’
பல காலம் இப்படிப்
பாடிப் பயன் இல்லையே !

மலை மேலே ஏறி நீ
வருவாய் என்றே எண்ணினோம்.
மல்லி கைப்பூக் கொண்டுநீ
தருவாய் என்றும் பாடினோம்.

எத்த னைநாள் பாடியும்
ஏனோ நீயும் வரவில்லை.
சத்தம் போட்டுப் பாடியும்
சற்றும் நெருங்கி வரவில்லை.

உன்னை விரும்பி அழைத்துமே
ஓடி நீ வராததால்
விண்க லத்தில் ஏறியே
விரைவில் வருவோம் உன்னிடம் !

தெரியுமா தம்பி ? #

நெட்டை யான காலுடனே
நீள மான கழுத்துடனே
சுட்டுப் பொசுக்கும் மணலில்கூடச்
சுமையைத் தூக்கிச் செல்லும்அது
என்ன தெரியுமா ? -தம்பி என்ன தெரியுமா ?

முறத்தைப் போன்ற காதுடனே
முகத்தில் ஒற்றைக் கையுடனே
உரலைப் போன்ற காலுடனே
ஊர்வ லத்தில் வருமேஅது
என்ன தெரியுமா ? தம்பி என்ன தெரியுமா ?

பட்டுப் போன்ற உடலுடனே
பலநி றத்தில் இறகுடனே
கட்டை யான குரலுடனே
களித்து நடனம் ஆடும்அது
என்ன தெரியுமா ? தம்பி என்ன தெரியுமா ?

வட்ட மான முகத்துடனே
வளைந்தி ருக்கும் மூக்குடனே
முட்டை போன்ற கண்ணுடனே
வேட்டை ஆடும் இரவில் அது
என்ன தெரியுமா ? தம்பி என்ன தெரியுமா ?

விடைகள் : ஒட்டகம், யானை, மயில், ஆந்தை

கொய்யாப் பழம் #

ஐயா வீட்டுக்
கொய்யாப் பழம்
ஆசை யாகத்
தந்த பழம்.

கையில் எடுத்து
வாயில் வைத்துக்
கடிக்கக் கடிக்க
இனிக்கும் பழம்.

ஐயா வீட்டுக்
கொய்யாப் பழம்
ஆசை யாகத்
தந்த பழம்.

நெய்யில் செய்த
லட்டுப் போல
நேர்த்தி யாக
இருக்கும் பழம்
வெயில் நேரம்
தின்னத் தின்ன
மிகவும் சுவை
கொடுக்கும் பழம்.

ஐயா வீட்டுக்
கொய்யாப் பழம்
ஆசை யாகத்
தந்த பழம்.

உதவும் கத்தி #

பென்சில் சீவ உதவிடும்
பெரிய பழத்தை நறுக்கிடும்

மரத்துப் பட்டை சீவிடும்
வாழை இலையை அறுத்திடும்

ஓலை நறுக்க உதவிடும்
உடைத்த தேங்காய் கீறிடும்

கயிற்றை அறுக்க உதவிடும்
காய் கறிகள் நறுக்கிடும்

நன்மை செய்ய நித்தமும்
நமக்கு உதவும் கத்தியால்,

கவனக் குறைவி னாலேநாம்
காயப் படுத்திக் கொள்வதா ?

வால் #

ஈயை ஓட்ட என்றும் உதவும்
பசுவின் வால்.
எதிர்த்து நீந்தத் துடுப்பாய் உதவும்
மீனின் வால்.
குளிரில் உடம்பைச் சூடு படுத்தும்
அணிலின் வால்.
கிளையில் மாட்டித் தொங்கிட உதவும்
குரங்கின் வால்.
கொடிபோல் ஆட்டி ஆபத்து உணர்த்தும்
முயலின் வால்.
கோபம் வந்தால் சிலிர்த்து நிற்கும்
பூனை வால்.
நன்றியைக் காட்ட நன்றாய் உதவும்
நாயின் வால்.
நமக்கும் இருந்தால் எப்படி உதவும் ?
எண்ணிப் பார்.

புகை விடாத ரயில் ! #

சம்பத்துக்கு வீடு உண்டு
தாம்ப ரத்திலே.

பட்டுவுக்கு வீடு உண்டு
பல்லா வரத்திலே.

பாலுவுக்கு வீடு உண்டு
பரங்கி மலையிலே.

மாலதிக்கு வீடு உண்டு
மாம்ப லத்திலே.

கோமதிக்கு வீடு உண்டு,
கோடம் பாக்கத்தில்.

குமரனுக்கு வீடு உண்டு
குரோம் பேட்டையில்.

மீனாவுக்கு வீடு உண்டு
மீனம் பாக்கத்தில்.

சௌந்தருக்கு வீடு உண்டு
சைதாப் பேட்டையில்

இவர்கள் வீடு செல்லவே
ஏறு ஏறு ரயிலிலே.

புகைவி டாத ரயிலிலே
போக லாமே விரைவிலே !

வெள்ளைக்கொக்கு #

ஆட வில்லை; அசைய வில்லை.
அடடே, பளிங்குச் சிலைபோல்
ஆற்றின் ஓரம் நிற்கும் அந்த
அழகுக் கொக்கைப் பாராய் !

நீண்ட கால்கள், நீண்ட கழுத்து,
நிறமோ வெள்ளை யாகும்.
காண்ப தற்குச் சாது. ஆனால்
கவன மாக நோக்கும்.

ஈட்டி போன்ற அலகை முன்னால்
நீட்டிக் கொண்டு நிற்கும்.
இரையைக் கண்ட வுடனே அதுவும்
எட்டி விரைந்தே பிடிக்கும்.

மீன்கள், நண்டு, தவளை, பூச்சி
விரும்பிப் பிடித்துத் தின்னும்.
மெல்ல நாமும் நெருங்கிச் சென்றால்
விரைந்து மேலே பறக்கும் !

அன்னம் #

பாலைப் போன்ற வெள்ளை நிற
அன்னத்தைப் பாராய்-அது
படகு போலே அசைந்தி டாமல்
நீந்துது பாராய்.

நீள மாக வளைந்தி ருக்கும்
கழுத்தி னைப் பாராய்-அதோ
நீரில் தலையை விட்டு மீனைப்
பிடிக்குது பாராய்.

அன்னை முதுகில் ஏறிச் செல்லும்
குஞ்சுகள் பாராய்-அவை
அச்சம் வந்தால் சிறகுக் குள்ளே
ஒளிவதைப் பாராய்.

கன்னங் கரிய நிறத்தில் கூட
அன்னம் இருக்குதே!-அதைக்
காண லாமே மிருகக் காட்சி
சாலை தன்னிலே !

எட்டு மாடிக் கட்டடம் #

எட்டு மாடிக் கட்ட டத்தில்
ஏறி நிற்கிறேன்
இங்கி ருந்தே சென்னை முழுதும்
நன்கு பார்க்கிறேன்

கற்ப காம்பாள் கோயில் அதோ
கண்ணில் தெரியுது
கடற் கரையில் சின்னச் சின்ன
உருவம் தெரியுது

கோட்டை முன்னால் கம்பம் ஒன்றில்
கொடி பறக்குது
கூவம் ஆறு குறுக்கும் நெடுக்கும்
வளைந்து செல்லுது

தலையில் வகிடு எடுத்த தைப்போல்
சாலை தெரியுது
தவழும் குழந்தை போல மோட்டார்
வண்டி நகருது

நிறையக் கப்பல் துறை முகத்தில்
நின்றி ருக்குது.
நிமிர்ந்து நிற்கும் கோபு ரங்கள்
எங்கும் தெரியுது

உயர்ந்த கூண்டு நாலு புறமும்
மணியைக் காட்டுவது
உச்சி யிலே சிலுவை கூட
நன்கு தெரியுது

புகையில் லாத ரயிலும் ஊரில்
புகுந்தே ஓடுது
பொம்மை ரயில் போலே அதுவும்
எனக்குத் தோணுது

மரங்கள் எல்லாம் வீடுகளை
மறைத்து நிற்குது
மாமா வீடு எங்கே? எங்கே?
மனசு தேடுது!

7 + 7 = 14 #

ஏழும் ஏழும் பதினாலாம்.
எலியா ருக்கு முழம்வாலாம்.

அறைக்குள் எலியார் புகுந்தாராம்
அங்கும் இ்ங்கும் பார்த்தாராம்.

இரண்டு தட்டில் பணியாரம்
இருந்தது கண்டு மகிழ்ந்தாராம்.

கடித்துக் கடித்துத் தின்றாராம்
கணக்கைக் கூட்டிப் பார்த்தாராம்.

ஏழும் ஏழும் பதினாலாம்
எலியார் ஏப்பம் விட்டாராம் !

தூங்கும் விதம் #

ஒட்டைச் சிவிங்கி நின்று கொண்டே
நன்கு தூங்கிடும்.
உயரே வௌவால் தலைகீ ழாகத்
தொங்கித் தூங்கிடும்.

சிட்டுக் குருவி மரத்தின் கிளையைப்
பற்றித் தூங்கிடும்.
சின்னப் பாப்பா தொட்டி லுக்குள்
படுத்துத் தூங்கிடும்.

கண்ணை மூடி நாமெல் லாரும்
நன்கு தூங்குவோம்.
கண்ணைத் திறந்த படியே மீனும்
பாம்பும் தூங்கிடும்.

என்ன கார ணத்தி னாலே
என்று தெரியுமா ?
இவைக ளுக்குக் கண் ணைமூட
இமைகள் இல்லையே !

Scroll to Top