என் பிறந்த நாள் #

இன்று எனக்குப் பிறந்தநாள்
இறைவன் என்னைப் படைத்தநாள்.

அன்பு காட்டி வாழவும்,
அறிவை வளர்த்துக் கொள்ளவும்,
என்றும் நன்மை செய்யவும்
எண்ணிப் பார்க்கும் நல்லநாள்.

இன்று எனக்குப் பிறந்தநாள்
இறைவன் என்னைப் படைத்தநாள்.

உண்மை பேசி உயரவும்,
உயர்ந்தோர் வழியில் செல்லவு ம்,
தன்னம் பிக்கை கொள்ளவும்
சாமி அருளை வேண்டும்நாள்.

இன்று எனக்குப் பிறந்தநாள்
இறைவன் என்னைப் படைத்தநாள்.

ஏணி மேலே ஏணி #

ஏணி மேலே ஏணி வைத்து
ஏறப் போகிறேன்.

ஏறி ஏறி எட்டி வானை
முட்டப் போகிறேன்.
வானில் உள்ள மீனை யெல்லாம்
வளைக்கப் போகிறேன்.

வளைத்து வளைத்துச் சட்டைப் பைக்குள்
அடைக்கப் போகிறேன்.
பந்து நிலா அதை எடுத்து
வீசப் போகிறேன்.

பாலு, சோமு உங்கள் சமர்த்தைப்
பார்க்கப் போகிறேன்.

முந்திப் பந்தைப் பிடிப்பவனை
வாழ்த்தப் போகிறேன்.

மூச்சுப் பிடித்துப் பூமிமீது
குதிக்கப் போகிறேன்.

பாப்பாவின் அழுகை #

சின்னப் பாப்பா அழுதது;
தேம்பித் தேம்பி அழுதது.

கிட்டு அண்ணன் ஓடி வந்தான்;
அழுகை நிற்க வில்லை.
கிலுகி லுப்பை ஆட்ட லானான்;
அழுகை நிற்க வில்லை !

சின்னப் பாப்பா அழுதது;
தேம்பித் தேம்பி அழுதது.

பொன்னி அக்கா ஓடி வந்தாள்;
அழுகை நிற்க வில்லை.
‘பூம்பூம்’ என்றே ஊத லானாள்;
அழுகை நிற்க வில்லை !

சின்னப் பாப்பா அழுதது;
தேம்பித் தேம்பி அழுதது.

சத்தம் கேட்டே அப்பா வந்தார்;
அழுகை நிற்க வில்லை.
தாளம் போட்டுக் காட்டலானார்
அழுகை நிற்க வில்லை!

சின்னப் பாப்பா அழுதது;
தேம்பித் தேம்பி அழுதது.

அம்மா உடனே அருகில் வந்தாள்;
அழுகை நிற்க வில்லை.
‘ஆ…ராரோ’ பாட லானாள்
அழுகை பறந்து போச்சு !

பள்ளிக்கூட மணி #

டாண் டாண், டாண் டாண்
மணி அடிக்குது.
நம்மையெல்லாம் வருகவருக
என்ற ழைக்குது.
சிறுவரோடு சிறுமியரைச்
சேரத்த ழைக்குது.
அவரவர்கள் இடத்தில்வந்தே
அமரச் சொல்லுது.

ஆசிரியர் வந்ததுமே
நிற்கச் சொல்லுது.
அக்கறையாய்ப் பாடமெல்லாம்
கற்கச் சொல்லுது.

படித்தபடி வாழ்க்கையிலே
நடக்கச் சொல்லுது.
பலரும்போற்ற நல்லபெயர்
எடுக்கச் சொல்லுது !

அதிசயம்! #

அழகுத் தோகை விரித்து நன்றாய்
ஆடும் மயிலைப் பாராய்.
அந்த மயிலும் ஆண்மயில்தான்
அதனை நீயும் அறிவாய

அமுத மாகக் குயிலும் பாடும்
அதனைக் கேட்டு, மகிழ்வாய்
அந்தக் குயிலும் ஆண்குயில்தான்
அதனை நீயும் அறிவாய்.

அடர்ந்த பிடரி மயிர்இருக்கும்
அழகுச் சிங்கம் பாராய்
அந்தச் சிங்கம் ஆண் சிங்கம்தான்
அதனை நீயும் அறிவாய்.

அழகுத் தோகை, இனிய குரலும்,
அடர்ந்த பிடரி மயிரும்
ஆண்இனத்தில் இருக்கும் இந்த
அதிச யத்தை அறிவாய் !

ராஜ கோபுரம் #

பொழுது புலரும் வேளையில்
எழுந்து செல்வேன் வேகமாய்.
அழகு ராஜ கோபுரம்
அருகில் தெரியும், வணங்குவேன்.

ஏழ டுக்குக் கோபுரம்
எங்கள் ஊருக் கோபுரம்
மேலே காணும் கலசங்கள்
மினுமி னுக்கும் பொன்னைப் போல்.

ஆனை முகத்துக் கணபதி
அழகு மயிலில் வேலவன்
வீணை யோடு கலைமகள்
வெற்றி அளிக்கும் திருமகள்

காளை மீது சிவனுடன்
காட்சி அளிக்கும் பார்வதி
மேலும் கடவுள் பலரையும்
வெளியில் காட்டும் கோபுரம்.

தெய்வ மெல்லாம் கூடியே
சேர்ந்து காட்சி தருவதால்
கைகள் கூப்பித் தொழுகிறேன்
காலை எழுந்த உடனேயே.

குற்றாலத்துக் குரங்கு #

குற்றா லத்து மலையிலே
குரங்கு ஒன்று இருந்ததாம்.
குரங்கு ஒன்று இருந்ததாம்.
குட்டி யோடு வாழ்ந்ததாம்.

அம்மாக் குரங்கும் குட்டியும்
அருவி நீரில் குளிக்குமாம்.
அருவி நீரில் குளிக்குமாம்.
ஆனந் தமாய்க் குதிக்குமாம்.

குளித்த பிறகு இரண்டுமே
குடுகு டென்றே ஓடுமாம்.
குடுகு டென்றே ஓடுமாம்.
கோயில் வாசல் சேருமாம்.

குட்டிக் குரங்கும் தாயுமே
கோயி லுக்குள் செல்லுமாம்,
கோயி லுக்குள் செல்லுமாம்.
குனிந்து வணக்கம் செய்யுமாம்.

பழங்கள் தேங்காய்த் தட்டுடன்
பக்தர் அங்கே வருவராம்
பக்தர் அங்கே வருவராம்.
பார்த்துக் கொண்டே யிருக்குமாம்.

தட்டி லுள்ள பொருள்களைத்
தட்டிப் பறிப்ப தில்லையாம்.
தட்டிப் பறிப்ப தில்லையாம்.
தடங்கல் செய்வ தில்லையாம்.

அர்ச்ச னைகள் நடப்பதை
அம்மாக் குரங்கு காட்டுமாம்.
அம்மாக் குரங்கு காட்டுமாம்.
அதனைக் குட்டி பார்க்குமாம்.

குங்கு மத்தைத் தாயுமே
குனிந்து பணிந்து வாங்குமாம்.
குனிந்து பணிந்து வாங்குமாம்.
குட்டி தன்னை நெருங்குமாம்.

குட்டிக் குரங்கின் நெற்றியில்
பொட்டு வைத்து மகிழுமாம்.
பொட்டு வைத்து மகிழுமாம்.
கட்டி முத்தம் கொடுக்குமாம்.

பக்தர் இரண்டு குரங்கையும்
பார்த்துப் பார்த்து மகிழ்வராம்.
பார்த்துப் பார்த்து மகிழ்வராம்.
பழங்கள் தேங்காய் தருவராம்.

அம்மா குரங்கும் குட்டியும்
அவற்றை வாங்கிக் கொள்ளுமாம்.
அவற்றை வாங்கிக் கொள்ளுமாம்.
ஆசை யாகத் தின்னுமாம்.

தின்ற பிறகு இரண்டுமே
தீர்த்தம் வாங்கிக் குடிக்குமாம்.
தீர்த்தம் வாங்கிக் குடிக்குமாம்.
திரும்பி ஓட்டம் பிடிக்குமாம்

கண்ணன் வீட்டுத் தோட்டம் #

கண்ணன் வீட்டுத் தோட்டத்திலே
வண்ண வண்ண மலர்கள் உண்டு.

வண்ண மலர்கள் கூட்டத்திலே
வாச னைகள் அதிகமுண்டு.

வாச னையை அறிந்துகொண்டு
வண்டு தேடி வருவதுண்டு.

வண்டின் பசியைத் தீர்த்திடவே
மலர்கள் தேனைத் தருவதுண்டு.

மலர்கள் தந்த தேனைஉண்டு
வண்டு சுற்றி வருவதுண்டு.

வண்டு சுற்றிச் சுற்றிவந்து
வாழ்த்துப் பாடி மகிழ்வதுண்டு.

கண்ணன் கையில் கண்டது….? #

கோகு லத்துக் கண்ணன் அதோ
தெருவில் வருகிறான்.
குறும்புச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே
அருகில் வருகிறான்.

மேக வண்ணக் கண்ணன் அதோ
தெருவில் வருகிறான்.
மெல்ல, மெல்ல நடந்து நடந்தே
அருகில் வருகிறான்.

கையைப் பின்னால் மறைத்துக் கொண்டே
கண்ணன் வருகிறான்.
கள்ளச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே
கண்ணன் வருகிறான்.

பையப் பைய நடந்து நடந்து
கண்ணன் வருகிறான்.
பார்த்துக் கண்ணைச் சிமிட்டிக் கொண்டே
கண்ணன் வருகிறான்.
ஃ ஃ ஃ

கண்ணன் எதையோ பின்புறம்
கையில் வைத்து மறைக்கிறான்.
என்ன வாக இருக்குமோ?
எட்டிப் பார்த்தேன், ஆவலாய்.

எட்டி எட்டிப் பார்த்துமே
எனக்குத் தெரிய வில்லையே !
சுற்றி வந்தேன் கண்ணனை.
சுற்றி அவனும் ஏய்த்தனன் !

மாயக் காரன் கைகளை
மறைத்து மறைத்து வைத்ததால்,
ஓய்ந்து போனேன். கடைசியில்
உயரே கையைத் தூக்கினான்.

கண்ணன் கையில் இருந்ததைக்
கண்ட வுடனே நானுமே
கொண்டேன் மிகவும் இன்பமே
குதிக்க லானேன், மகிழ்ச்சியில் !

கண்ணன் கையில் இருந்தது
என்ன என்று தெரியுமா ?
வெண்ணெய் இல்லை; குழல் இல்லை.
வேறே என்ன இருந்தது ?

கண்ணன் கையில் இருந்தது
கால மெல்லாம் உதவிடும்
உண்மை கூறும் புத்தகம்
உயர்ந்த பகவத் கீதையாம் !

பெரிய கண்டம் #

கண்டங் களிலே மிகவும் பெரிய
கண்டம் ஆசியா.
காடு மலை பீட பூமி
நிறைந்த ஆசியா.

பண்டைக் கால ஆதி மனிதர்
பிறந்த ஆசியா.
பழமை யான நாக ரிகம்
சிறந்த ஆசியா.

புத்தர், ஏசு, நபிகள், காந்தி
பிறந்த ஆசியா.
புனித மான மதங்கள் பிறந்து
வளர்ந்த ஆசியா.

மொத்தம் இந்த உலகில் உள்ள
கண்டம் ஐந்திலே
மிகவும் அதிக மக்கள் வாழும்
கண்டம் ஆசியா.

சிரிக்கும் பூக்கள் #

வண்ண வண்ணப் பூக்கள்-நல்ல
மணம் நிறைந்த பூக்கள்.
என்னைப் பார்த்துச் சிரிக்கும்-அவை
இனிய நல்ல பூக்கள்.

நீலம், பச்சை, சிவப்பு-இன்னும்
நிறங்கள் பலவும் உண்டு.
காலை நேரம் வருவேன்-இந்தக்
காட்சி கண்டு மகிழ்வேன்.

ஆடி அசையும் பூக்கள்-நான்
அருகில் சென்று பறிப்பேன்.
கூடை நிறைந்து போகும்-நான்
கொய்த மலர்கள் சிரிக்கும்.

பார்க்கும் போதும் சிரிக்கும்-நான்
பறிக்கும்போதும் சிரிக்கும்.
சேர்த்துக் கட்டும் போதும்-அவை
சிரித்துக் கொண்டே இருக்கும் !

கண்ணன் சிலைக்குப் போட-நான்
கட்டி வைத்த பூக்கள்
என்னைப் பார்த்துச் சிரிக்கும்-என்
சின்னத் தம்பி போல !

குரங்குக் குடும்பம்
(மாமல்லபுரச் சிற்பம்) #

அப்பாக் குரங்கு பின்புறத்தில்
அமர்ந்தி ருக்குது;
அம்மாக் குரங்கின் தலையி லிருந்து
பேன் எடுக்குது.

பிள்ளைக் குரங்கு அம்மா மடியில்
படுத்தி ருக்குது.
பிரிய மாக அம்மா அதற்குப்
பால் கொடுக்குது.
அன்பு, பாசம், கடமை யெல்லாம்
கல்லில் காட்டிடும்
அற்பு தத்தைச் செய்த சிற்பி
அவரைத் தெரியுமோ?

இன்று அவரைத் தெரிய வி்ல்லை
என்ற போதிலும்,
இந்தக் காட்சி நமது நெஞ்சில்
என்றும் நிற்குமே !

அவர் யார்? #

தட்டில் இருந்த சோளப் பொரியை
விட்டு எறிந்த தார்? -பின்
நட்ட நடுவே அந்த வெள்ளித்
தட்டை வைத்த தார்?

வட்ட மாக நீலத் திரையில்
வெட்டி எடுத்த தார்?- சுற்றிப்
பொட்டுப் பொட்டாய் எங்கும் சரிகைப்
புள்ளி வைத்த தார்?

பட்டுத் துணியில் முத்தை எங்கும்
ஒட்டி வைத்த தார்?-அதன்
நட்ட நடுவே குண்டு விளக்கைக்
கட்டி விட்ட தார்?

பட்டப் பகலாய் ஒளியை வீசும்
வட்ட நிலவைப் பார்-உடன்
வெட்ட வெளிச்ச மாகத் தெரியும்,
இந்தப் பாடல் பார் !

கந்தன் சொல்கிறான் #

ஊரின் கோடியில் ஒருகுடிசை-அந்த
ஓலைக் குடிசை என்குடிசை.

சூறைக் காற்றில் பறக்கும் அது.
சிறுமழை பெய்யினும் ஒழுகும் அது.
யாரும் உள்ளே நுழைந்திடலாம்.
இழுத்துச் சாத்திடக் கதவில்லை.

ஊரின் கோடியில் ஒருகுடிசை-அந்த
ஓலைக் குடிசை என்குடிசை.

அருகில் எந்தத் தெருவுமில்லை.
அந்திபட் டாலோ விளக்குமில்லை.
சிறுஅகல் விளக்கில் படித்திடுவேன்.
தேர்வில் நிச்சயம் வென்றிடுவேன்.

ஊரின் கோடியில் ஒருகுடிசை-அந்த
ஓலைக் குடிசை என்குடிசை.

ஏழைக் குடிசையில் பிறந்தாலும்
எத்தனை துன்பப் பட்டாலும்
நாளைய தலைவன் ஆவதற்கு
நாளும் முயற்சி செய்திடுவேன்.

ஊரின் கோடியில் ஒருகுடிசை-அந்த
ஓலைக் குடிசை என்குடிசை.

ராமனும் கண்ணனும் #

ராமன் பிறந்தது நவமியிலே.
நட்ட நடுப்பகல் வேளையிலே.

கண்ணன் பிறந்தது அஷ்டமியில்
காரிருள் நடுநிசி வேளையிலே.

ராமன் பிறந்தது அரண்மனையில்
நன்றாய்ப் பார்த்தனர் மக்களெல்லாம்.

கண்ணன் பிறந்தது கடும்சிறையில்.
கண்டவர் தாயும் தந்தையுமே.

சூரிய குலத்தில் ராமனுமே
தோன்றினன், பெருமை தோன்றிடவே.

சந்திர குலத்தில் கண்ணனுமே
வந்தனன், பெருமை தந்திடவே.

மனிதர் போல இவ்வுலகில்
வாழ்ந்து காட்டினன் ராமனுமே.

மாயா ஜாலம் பலபுரிந்து
வாழ்ந்தனன் நீலக் கண்ணனுமே.

ராமன் வாழ்வைப் பின்பற்றி
நடந்திட நம்மால் முடிந்திடுமே.

கண்ணன் வாழ்வும் அப்படியா?
எண்ணிப் பார்க்கவும் முடியாதே !

ராமன் பெற்ற குணங்களெலாம்
நாமும் பெற்றுச் சிறந்திடுவோம்.

கண்ணன் கீதையில் கூறியதைக்
கற்றே நாமும் உயர்ந்திடுவோம்.

வாழ்ந்து காட்டிய ராமனையும்
வழியைக் காட்டிய கண்ணனையும்

வாழ்வில் என்றும் மறவோமே !
மறவோம், மறவோம், மறவோமே !

சிரிக்கும் தாத்தா #

எங்கள் வீட்டுக் கூடம் அதிலே
இருக்கும் காந்தித் தாத்தா.
என்றும் என்னைப் பார்த்துப் பார்த்துச்
சிரிக்கும் காந்தித் தாத்தா.

‘உண்மை, அகிம்சை, இரண்டும் நமது
கண்கள்’ என்னும் தாத்தா.
‘உயிர்கள் யாவும் உறவு’ என்றே
உணர்த்தும் காந்தித் தாத்தா.

உழைத்தி டாமல் உண்ணு வோரைத்
திருடர் என்பார் தாத்தா.
உலகில் உள்ள இருளைப் போக்கும்
ஒளியாய் வந்த தாத்தா.

நமது நாட்டின் சுதந்தி ரத்தைப்
பெற்றுத் தந்த தாத்தா.
நாமெல் லாரும் வாழும் வழியைக்
கற்றுத் தந்த தாத்தா.

கூடப் பிறந்தவர் #

கோடி கோடி பேர்கள் என்றன்
கூடப் பிறந்தவர்.
குமரி முதலாய் இமயம் வரையில்
வாழ்ந்து வருபவர்.

ஓடி ஓடி உழைத்து நாட்டை
உயரச் செய்பவர்.
உரிமை, கடமை இரண்டும் இரண்டு
கண்கள் என்பவர்.

வேறு வேறு மொழிகள் பேசும்
மக்க ளாயினும்
வெறுப் பில்லாமல் விருப்ப மோடு
கூடி வாழ்பவர்.

சீரும் சிறப்பும் பெற்று நமது
நாடு திகழவே
திட்ட மிட்டு வேலை செய்யும்
திறமை மிக்கவர்.

புத்தர், காந்தி, நேரு பிறந்த
நாட்டில் பிறந்ததைப்
பெருமை யாக எண்ணி மேலும்
பெருமை சேர்ப்பவர்.

இத்த லத்தில் பார தம்போல்
இல்லை எங்குமே
என்று சொல்லும் நல்ல நாளைக்
காணத் துடிப்பவர்.

புத்தகம் இதோ ! #

புத்தகம் இதோ
புத்தகம் இதோ
நித்தம் நித்தம் உதவுகின்ற
புத்தகம் இதோ !

முத்து முத்துக் கதைக ளெல்லாம்
விரும்பி நாமும் படித்திட
உத்த மர்கள் வாழ்க்கை தன்னை
உணர்ந்து நாமும் நடந்திட

புத்தகம் இதோ
புத்தகம் இதோ
நித்தம் நித்தம் உதவுகின்ற
புத்தகம் இதோ !

குருவைப் போல நல்ல தெல்லாம்
கூறி நம்மை உயர்த்திட
அருமை நண்பன் போல் நமக்கு
அருகில் இருந்து உதவிட

புத்தகம் இதோ
புத்தகம் இதோ
நித்தம் நித்தம் உதவுகின்ற
புத்தகம் இதோ !

மெத்தப் பெரிய கவிஞ ரோடும்
வேண்டும் போது பேசிட
சித்தம் மகிழச் செய்யும் நல்ல
சித்தி ரங்கள் பார்த்திட

புத்தகம் இதோ
புத்தகம் இதோ
நித்தம் நித்தம் உதவுகின்ற
புத்தகம் இதோ !

இரவும் பகலும் எந்த நாளும்
ஏற்ற கல்வி கற்றிட
உரிய முறையில் அறிவு பெற்றே
உயர்ந்து நாமும் சிறந்திட

புத்தகம் இதோ
புத்தகம் இதோ
நித்தம் நித்தம் உதவுகின்ற
புத்தகம் இதோ !

என் கடிதம் #

அருமை மிக்க நண்ப னுக்குக்
கடிதம் எழுதவே
ஆசை யாக வெள்ளைத் தாளை
எடுத்துக் கொள்ளுவேன்.

‘அன்பு மிக்க சோமு வுக்கு,’
என்று தொடங்குவேன்.
அச்ச டித்த எழுத்தைப் போல
அழகாய் எழுதுவேன்.

‘வணக்கம்’ என்றே அடுத்த வரியில்
தனியாய் எழுதுவேன்.
வரிசை யாகத் தகவல் யாவும்
புரியக் கூறுவேன்.

ஆசை யாகக் கடிதம் தன்னை
எழுதி முடித்ததும்
‘அன்பு நண்பன்,’ என்றே எழுதி
அதற்கும் அடியிலே,

‘கண்ணன்’ என்றே கையெ ழுத்தைப்
போட்டு நானுமே,
கடிதம் அதனை உறைக்குள் வைத்துக்
கருத்தாய் ஒட்டுவேன்.

குண்டு குண்டாய் நண்ப னுடைய
விலாசம் எழுதுவேன்.
குறையில் லாமல் அஞ்சல் தலையை
உறைமேல் ஒட்டுவேன்.

அஞ்சல் பெட்டி வாய்க்குள் போட்டு
வீடு திரும்புவேன்.
அருமை நண்பன் பதிலைக் காண
ஆவல் கொள்ளுவேன்.

Scroll to Top