கொய்யாப் பூவே ! #
கொய்யாப் பூவே, கொய்யாப் பூவே,
தரையில் கிடப்பதேன்?
குருவி, காகம் கிளையில் அமர்ந்து
கொத்திப் போட்டதோ?-இல்லை,
பெரிய காற்று விரைந்து வந்து
பிய்த்துப் போட்டதோ?
கொய்யாப் பூவே, கொய்யாப் பூவே,
தரையில் கிடப்பதேன்?
குறும்புப் பையன் எறிந்த கல்லால்
பிரிய நேர்ந்ததோ? – இல்லை,
கொறிக்கும் அணில்தான் உன்னைக் கீழே
பறித்துப் போட்டதோ?
கொய்யாப் பூவே, கொய்யாப் பூவே,
தரையில் கிடப்பதேன்?
ஃ ஃ ஃ
பூவே, நீயே காய்ஆவாய்.
காயி லிருந்து கனிஆவாய்.
கனியை உடனே பறித்திடலாம்
கடித்துக் கடித்துச் சுவைத்திடலாம்
என்றே நானும் சிலநாளாய்
எண்ணி யிருந்தேன். ஆனால்என்
எண்ணத் தினிலே மண்விழவா
இப்படி மண்ணில் நீ விழுந்தாய் ?
மத்தாப்பு (முன்னும் பின்னும்) #
கம்பி மத்தாப்பு-அதைக்
கையில் பிடித்ததுமே
தம்பி கொளுத்தினான்-நண்பர்
தாவி வந்தனர்.
நண்பர் அனைவரும்-பார்த்து
நன்கு ரசித்தனர்.
வண்ணப் பொறிகளை-கண்டு
மகிழ்ந்து குதித்தனர்.
“எரிந்த கம்பியை-உடன்
எடுத்துச் சென்றுநீ
தெருவின் ஓரமாய்-போட்டுத்
திரும்பி வந்திடு.
நட்ட நடுவிலே-போட்டால்,
நடப்போர் கால்களைச்
சுட்டுப் பொசுக்கிடும்”-எனச்
சொன்னார் தந்தையும்.
எரியும் போதிலே-‘ஓஹோ!’
என்று புகழ்ந்தனர்.
எரிந்து முடிந்ததும்-அந்தோ,
இந்த நிலைமையா!
சிறுவர் பத்திரிகை #
சிறுவருக் கான பத்திரி கைகள்
நிறைய வேண்டும்.
சித்திரம் எல்லாப் பக்கங் களிலும்
திகழ வேண்டும்.
அருமை யான கதையும் பாட்டும்
இருக்க வேண்டும்.
அறிவைப் புகட்டும் கட்டுரை பலவும்
அமைய வேண்டும்.
தெய்வ பக்தி, தேச பக்தி
ஊட்ட வேண்டும்.
சிரிக்க வைக்கும் செய்தி கூட
இருக்க வேண்டும்.
ஐயம் தீர்க்கக் கேள்வியும் பதிலும்
அவசியம் வேண்டும்.
அறிஞர் வாழ்வை அழகாய் எடுத்துக்
கூற வேண்டும்.
புத்தம் புதிய கலைகள் எல்லாம்
விளக்க வேண்டும்.
புதிர்கள் போட்டு நமது அறிவை
வளர்க்க வேண்டும்.
நித்தம் நமது பண்பை மேலும்
உயர்த்த வேண்டும்.
நிலைத்த புகழைப் பெறவே வழிகள்
காட்ட வேண்டும்.
உற்ற நண்பர் போலே அவையும்
உதவ வேண்டும்.
உதவி, உதவி நமது வாழ்வை
உயர்த்த வேண்டும்.
பெற்றோர் அவற்றைக் காசு கொடுத்து
வாங்க வேண்டும்.
பிள்ளைக ளுக்குப் பிரியத் துடனே
வழங்க வேண்டும்.
அண்ணனின் வேலை #
எங்கள் அண்ணன் செய்த வேலை
என்ன என்று தெரியுமா?
வேளா வேளை தின்று விட்டு
விழுந்து படுத்துத் தூங்க வில்லை.
பாழாய்ப் போன சினிமாப் பார்க்கப்
பகலில் க்யூவில் நிற்க வில்லை.
கெட்ட நண்பர் கூடச் சேர்ந்து
வட்ட மிட்டுத் திரிய வில்லை.
வெட்டிப் பேச்சுப் பேசிக் கொண்டு
வீம்புச் சண்டை போடவில்லை.
எங்கள் அண்ணன் செய்த வேலை
என்ன என்று தெரியுமா?
பார தத்தைத் தாக்க வந்தார்
பகைவர் என்று தெரிந்ததும்,
வீரம் பொங்கத் தீரத் தோடு
விரைந்து சென்றார் போர்க்களம்.
உறக்கம் இன்றி, உணவும் இன்றி
உயிரை மதித்தி டாமலே,
அரக்க ரான எதிரிப் படையை
அலற அலற விரட்டினார்.
மூர்க்க மான டாங்கிப் படையை
முறிய டித்து நொறுக்கினார்.
தாக்க வந்த விமானம் யாவும்
தவிடு பொடியாய் ஆக்கினார்.
சிங்கம் போல வீரத்தோடு
தேசம் தன்னைக் காக்கவே
எங்கள் அண்ணன் செய்த வேலை
எனக்குப் பெருமை அல்லவோ?
எனக்கு மட்டும் பெருமையில்லை;
இந்தி யர்க்கே பெருமையாம்!
பெருமை மிக்க பாரதம் #
பெருமை மிக்க பார தத்தில்
பிறந்த குழந்தைகள்-என்ற
பெருமை யோடு நாமெல் லோரும்
வளர்ந்து வருகிறோம்.
சிறந்த குணங்கள் பெற்று நமது
நாடு செழிக்கவே
செயல்கள் பலவும் திருத்த மாகச்
செய்து மகிழுவோம்.
அன்னை, தந்தை மகிழும் வகையில்
கற்று வருகிறோம்-நல்ல
அறிஞர் சொன்ன வழியில் நாளும்
நிற்க முயல்கிறோம்.
உண்மை ஒன்றே கடவுள் என்றே
உணர்ந்து வருகிறோம்.
உழைத்து நாமும் உயர்வோம் என்றே
உறுதி கொள்கிறோம்.
ஏழை யென்றும் எளியோ ரென்றும்.
எண்ணங் கொண்டிடோம்-நாம்
இந்தி யர்கள் அனைவ ருக்கும்
சொந்த மாகிறோம்.
நாளை இந்த நாட்டை நாமே
ஆளப் போகிறோம்-இன்றே
நல்ல முறையில் அடித்த ளத்தை
அமைத்துக் கொள்ளுவோம்
ஆறு சிறுவர்கள் #
சின்னஞ் சிறிய ஊரு-இதில்
தென்னை மரங்கள் நூறு.
என்னை சேர்த்து மொத்தம்-இங்கே
இருக்கும் சிறுவர் ஆறு.
கடைகள் இங்கே இல்லை.
கல்விக் கூடம் இல்லை.
நடந்து சென்றே கற்போம்,
நான்கு கிலோ மீட்டர்.
முருகன் முதலாம் வகுப்பு.
மோசஸ் இரண்டாம் வகுப்பு.
கறுப்பன் மூன்றாம் வகுப்பு.
காசிம் நான்காம் வகுப்பு.
நந்தன் ஐந்தாம் வகுப்பு.
நானோ ஆறாம் வகுப்பு.
ஐந்து பேரும் என்னை
அண்ணா என்றே அழைப்பார்.
சுட்டுப் பொசுக்கும் வெயிலில்,
சுழற்றி அடிக்கும் காற்றில்
கொட்டும் மழையில் கூட
கூடி நாங்கள் செல்வோம்.
படித்துப் படித்து மேலும்
பட்டம் பலவும் பெறுவோம்.
படித்து முடித்த பின்னர்
பலரும் போற்ற வாழ்வோம்
நான்கு குழந்தைகள் #
எங்கள் வீட்டில் குழந்தைகள்
என்னைச் சேர்த்து நான்கு பேர்.
தங்கைப் பாப்பா ஒன்று.
சமர்த்துப் பையன் இரண்டு.
சின்னக் கண்ணன் மூன்று.
சிரிக்கும் முருகன் நான்கு.
உண்மைதான் !
தங்கைப் பாப்பா மீனா.
சமர்த்துப் பையன் நானே.
சின்னக் கண்ணன் எங்கே?
சிரிக்கும் முருகன் எங்கே?
எங்கே என்றா கேட்கிறீர்?
இங்கே வந்து பாருங்கள்.
எங்கள் பூசை அறையிலே
இருக்கி றாரே இருவரும் !
அம்மா தினமும் சொல்லுவாள்
அவர்கள் தெய்வக் குழந்தைகள்!
நமது இமயம் #
உலகில் மிகவும் உயர்ந்த மலை
நமது இமயமாம்.
உறுதி யோடு என்றும் நிமிர்ந்தே
நிற்கும் இமயமாம்.
பல முனிவர் தவம் இருக்க,
பார்த்த இமயமாம்.
பகைவர் உள்ளே புகுந்தி டாமல்
தடுக்கும் இமயமாம்.
பனியை முதுகில் போர்த்துக் கொண்டு
மின்னும் இமயமாம்.
பயமு றுத்தும் கரடி புலிகள்
வாழும் இமயமாம்.
கனிகி ழங்கு மூலிகைகள்
காணும் இமயமாம்.
கங்கை, சிந்து, பிரம்ம புத்ரா
பிறக்கும் இமயமாம்.
இந்தி யாவின் வடக்கில் உள்ள
எல்லை இமயமாம்.
எவரெஸ்ட் என்னும் உயர்ந்த சிகரம்
இருக்கும் இமயமாம்.
டென்சிங் போல நானும் இமயம்
ஏறப் போகிறேன்.
திடமாய் நமது கொடியை உயரே
ஏற்றப் போகிறேன்.
கண்ணன் மீண்டும் பிறப்பானா? #
குழந்தையாக மீண்டும் கண்ணன்
பிறக்க மாட்டானா?-புல்லாங்
குழல்எடுத்தே ஊதிஎன்னை
மயக்க மாட்டானா?
என்னை அவன் தோழனாக
ஏற்க மாட்டானா?-தினம்
வெண்ணெயில்ஓர் பங்குபோட்டு
நீட்ட மாட்டானா?
சின்னஞ்சிறு வாயைக்கொஞ்சம்
திறக்க மாட்டானா?-என்
கண்ணில்இந்த உலகமுழுதும்
காட்ட மாட்டானா?
மாடுகன்றைக் காட்டில்ஓட்டி
மேய்க்க மாட்டானா?-அங்கே
ஓடிஆட என்னைக்கூட்டுச்
சேர்க்க மாட்டானா?
மலைஎடுத்துக் குடையைப்போலப்
பிடிக்க மாட்டானா?-என்
தலையில்மழை விழுவதையும்
தடுக்க மாட்டானா?
கீதைதன்னைத் திரும்பவுமே
கூறமாட்டானா?-அதைக்
காதில்கேட்டுச் சிறந்தவனாய்
மாற மாட்டேனா?-நான்
மாற மாட்டேனா?
தம்பி பிறந்த நாள் #
எங்கள் தம்பி பிறந்தநாள்!
இனிய தம்பி பிறந்தநாள்!
திங்கட் கிழமை இன்றுதான்
செல்லத் தம்பி பிறந்தநாள்!
வண்ணச் சட்டை உடலிலே,
மணிகள் தொங்கும் கழுத்திலே.
கொண்டை அணிந்து கண்ணன்போல்
கொஞ்சு கின்றான் மழலையில்.
தோட்டம் நடுவே ஊஞ்சலில்
தூக்கி வைத்தோம் தம்பியை.
ஆட்டி ஆட்டி விடுகிறோம்;
அசைந்தே ஆடி மகிழ்கிறான்.
மாலைத் தென்றல் காற்றுமே
வந்து மெல்ல வீசுது.
நீலம், சிவப்பு, மஞ்சளில்
நிறைய பலூன் பறக்குது!
மலர்கள் தலையை ஆட்டியே
வருவோர் தம்மை அழைக்கவே,
கலகல எனப் பறவைகள்
காது குளிரப் பாடவே,
வட்ட மிட்டு நாங்களும்
வாழ்த்திக் கும்மி அடிக்கிறோம்.
கிட்டச் சென்று தம்பியைத்
தொட்டு முத்தம் கொடுக்கிறோம்.
கன்னங் குழியத் தம்பியும்
கையைத் தட்டிச் சிரிக்கிறான்.
அன்னை, தந்தை, பலரையும்
அணைத்து முத்தம் தருகிறான்.
விசை கொடுத்தால் ஓடிடும்
வித்தை யெல்லாம் காட்டிடும்
இசை முழக்கம் செய்திடும்
இனிய பொம்மைப் பரிசுகள் !
படம் நிறைந்த புத்தகம்
பலகை, பந்து, பலவகை
உடைகள், தின்னும் பண்டங்கள்
உவந்தே பலரும் தருகிறார்.
பட்டுப் போன்ற கைகளால்
பாசத் தோடு தம்பியும்
லட்டு, மிட்டாய், ரொட்டிகள்
நாங்கள் தின்னத் தருகிறான்.
சிறந்த இந்தக் காட்சியைத்
திரண்டு வந்து பாருங்கள்.
பிறந்த நாளில் தம்பியைப்
பெரியோர் கூடி வாழ்த்துங்கள்.
காந்தியைக் காணலாம் #
சிறுவன்
காந்தியைப்போல் ஒருமகானைக்
காட்டுவாய் அம்மா-அவர்
கருணைபொங்கும் திருமுகத்தைக்
காணுவேன் அம்மா.
காந்தியைப்போல் ஒருமகானைக்
காட்டுவாய் அம்மா-அவர்
கனியைப் போன்ற இனிய சொல்லைக்
கேட்பேனே அம்மா.
சாந்தமூர்த்தி காந்தியைப்போல்
காண முடியுமா?-அம்மா
சத்தியத்தின் வடிவம்தன்னைக்
காண முடியுமா?
மாந்தருக்குள் தெய்வம்தன் னைக்
காண முடியுமா?-நல்ல
வழியைக்காட்டும் ஒளியைநாமும்
காண முடியுமா?
அம்மா
காந்தியைப்போல் ஒருமகானை
இந்த உலகிலே
காணமுடியும், காணமுடியும்
கண்ணே, கேளடா.
உண்மைபேசும் இடத்தில்காந்தி
குடியிருக்கிறார்.
உறுதிஉள்ள இடத்தில்காந்தி
குடியிருக்கிறார்.
அன்புபொங்கும் இடத்தில்காந்தி
குடியிருக்கிறார்.
அகிம்சைஉள்ள இடத்தில்காந்தி
குடியிருக்கிறார்.
உண்மை, உறுதி, அன்பு, அகிம்சை
உன்னி டத்திலே
உள்ளதென்றால் உன்னிடத்தும்
காந்தி இருக்கிறார்.
என்றும்அவரைக் கண்டுகண்டு
இன்பம் கொள்ளலாம்.
இதயக்கோயில் தன்னில்வைத்துப்
பூசை செய்யலாம்.
தாத்தாவும் பேரனும் #
தாத்தா
சோற்று மூட்டை கட்டிக் கொண்டு
தோளில் ஏட்டைச் சுமந்து கொண்டு
ஆற்றைக் கூடக் கடந்து சென்று
அடுத்த நகரில் படித்து வந்தேன்
அந்தக் காலம்-அது
அந்தக் காலம்.
காட்டு வழியைக் கடந்து சென்று
கனத்த மழையில் நனைந்து கொண்டு
வீட்டை நோக்கி இரவில் வருவேன்
விளக்கே இல்லா வீதி வழியே
அந்தக் காலம்-அது
அந்தக் காலம்.
எண்ணெய் விளக்கை ஏற்றி வைத்து
எழுத்தைத் தேடித் தேடிப் பிடித்துக்
கண்கள் எரிய இரவு நேரம்
கல்வி தன்னைக் கற்று வந்தேன்
அந்தக் காலம்-அது
அந்தக் காலம்.
அரிசி வாங்கப் பணமும் இன்றி
அடுப்பு மூட்ட வழியும் இன்றி
இருந்த போதும் சம்ப ளத்தை
எப்ப டியோ கட்டி வந்தேன்
அந்தக் காலம்-அது
அந்தக் காலம்.
ஐந்து வகுப்புப் படிப்ப தற்குள்
அதிகத் தொல்லை அடைந்த தாலே
அந்த வகுப்பில் தேர்வு பெற்றும்
அந்தோ ! படிப்பை நிறுத்தி விட்டேன்
அந்தக் காலம்-அது
அந்தக் காலம்.
பேரன்
அதிக தூரம் நடந்தி டாமல்
அருகி லுள்ள பள்ளி சென்று
மதிய உணவும் உண்டு விட்டு
மகிழ்ச்சி யோடு கற்று வருவேன்
இந்தக் காலம்-இது
இந்தக் காலம்.
சீரு டையை அணிந்து கொண்டு
செல்வர் என்றும் ஏழை என்றும்
வேறு பாடே ஏதும் இன்றி
விருப்ப மோடு படித்து வருவேன்
இந்தக் காலம்-இது
இந்தக் காலம்.
இலவ சமாய்க் கல்வி உண்டு
இருந்து படிக்க வசதி உண்டு
கலக்க மின்றிக் கவலை யின்றிக்
கல்வி கற்றுத் திரும்பி வருவேன்
இந்தக் காலம்-இது
இந்தக் காலம்.
பென்சில், நோட்டு, தேவை யான
புத்த கங்கள் போன்ற வற்றை
அன்ப ளிப்பாய்ப் பெற்று நானும்
ஆர்வத் தோடு கற்று வருவேன்
இந்தக் காலம்-இது
இந்தக் காலம்.
இன்னும் நிறையக் கல்வி கற்று
இனிய முறையில் தொழிலும் கற்று
நன்மை செய்வேன், நமது நாடு
நன்கு வளர, நானும் வளர்வேன்.
இந்தக் காலம்-இது
இந்தக் காலம்.
எனது ஊர் #
என்றன் ஊரோ இராயவரம்;
இனிமை மிக்க சிறுநகராம்.
மன்னர் ஆண்ட புதுக்கோட்டை
மாவட் டத்தைச் சேர்ந்ததுவாம்.
தென்னை மரங்கள் இருபுறமும்
தென்றல் வீசி வரவேற்கும்.
செந்நெல் விளையும் வயல்களுமே
தெரியும் அந்த வழியெல்லாம்.
ஊரின் உள்ளே நுழைந்ததுமே
உள்ளம் கவரும் கோபுரங்கள்!
நேராய் உள்ள தெருக்களுடன்
நிறைய மாட மாளிகைகள்!
ஊரின் நடுவே சிவன்கோயில்
ஊருணி பலவும் அங்குண்டு.
மாரி யம்மன் திருக்கோயில்
மகிமை மிகவும் உடையதுவாம்.
முத்து மாரி அம்மனுக்கு
மிகமிகச் சீருடன் சிறப்பாகப்
பத்து நாட்கள் திருநாளாம்;
பலரும் பார்த்து மகிழ்வாராம்
கணித மேதை கதிரேசர்
கருத்துடன் பிள்ளைகள் படித்திடவே
புனித மான காந்திமகான்
பெயரில் பள்ளி நிறுவினரே.
பொன்னாச் சியெனும் ஊருணியின்
பொன்னைப் போன்ற நிறமுள்ள
தண்ணீர் உண்டு; ஊர்மக்கள்
தாகம் தீர்க்கும் குணமுண்டு.
வாரச் சந்தை புதன்கிழமை;
வருவார் மக்கள் திரளாக.
கீரை முதலாய் அரிசிவரை
கிடைக்கும் அந்தச் சந்தையிலே!
அம்மன் கோயில் முன்னாலே
ஆடிப் பாடித் தோழருடன்,
சின்ன வயதில் திரிந்ததனை
எண்ணும் போதே இனிக்கிறதே!
கதிரேசர்
சேவகரும் சேர்ந்தனர் ! #
வெள்ளையர்கள் நம்நாட்டை
ஆண்ட காலம்.
மிகக்கொடுமை மக்களுக்குச்
செய்த காலம்.
தனிஅரசாய்ப் புதுக்கோட்டை
இருந்த காலம்.
தடைகள்பல அரசாங்கம்
விதித்த காலம்.
தேசபக்தர் பலர்சிறையில்
வாழ்ந்த காலம்.
தெருவினிலே கூடுதற்கும்
பயந்த காலம்.
புதுக்கோட்டைத் தனிஅரசில்
அந்த நாளில்
புகழுடனே விளங்கிவந்த
ஊர்க ளுக்குள்
நான்பிறந்த இராயவரம்
என்னும் ஊரில்
நல்லவர்கள் பலர்தொண்டு
செய்து வந்தார்.
பாரதியார் பெயராலே
சங்கம் வைத்துப்
பையன்கள் சிலர்கூடி
நடத்தி வந்தோம்.
அறிஞர்களை வரவழைத்துப்
பேசக் கேட்டோம்.
அரியபல புத்தகங்கள்
படித்து வந்தோம்.
தேசபக்திப் பாடல்களைக்
கற்று வந்தோம்.
தினந்தோறும் நல்லறிவைப்
பெற்று வந்தோம்.
பாரதியார் விழாநடத்த
ஆசைப் பட்டோம்.
பலர்கூடி ஆர்வமுடன்
ஈடு பட்டோம்.
இராயவரம் மாரியம்மன்
கோவில் தன்னில்
எழிலுடைய வாகனங்கள்
பலவும் உண்டு.
கோயில்தனை நிர்வாகம்
செய்த நல்ல
குணமுடையோர் எங்களது
விருப்பம் போல
வெள்ளியிலே செய்தஒரு
கேட கத்தை
விருப்பமுடன் தந்தனரே
விழா நடத்த.
மாடுஇழுக்கும் சகடையிலே
கேட கத்தை
வைத்துஅதிலே பாரதியார்
படத்தை வைத்தோம்.
மலர்களினால் அலங்கரித்தோம்.
கொடிகள் ஏந்தி
“வாழ்க ! வாழ்க ! பாரதியார்
நாமம்” என்றோம்.
சுவாமிவலம் வருகின்ற
தெருக்க ளெல்லாம்
சுற்றிவந்தோம் பாரதியார்
பாட்டுப் பாடி.
இடிமுழக்கம் செய்வதுபோல்
சிறுவர் கூட்டம்
எழுச்சியுடன் பாரதியார்
பாட்டைப் பாட
அரசாங்கச் சேவகர்கள்
அங்கு வந்தார்,
“யார்இதனை நடத்துவது ?
சொல்க” என்றார்.
“ஊர்மக்கள் நடத்துகிறோம்
ஒன்று கூடி.
உயர்கவியைப் போற்றுகிறோம்
பாட்டுப் பாடி”
என்றதுமே அவர்எதுவும்
கூற வில்லை.
எங்களுடன் அவர்களுமே
நடந்து வந்தார்.
பாரதிக்குச் சிலர்தேங்காய்
உடைக்க லானார்.
பக்தியுடன் சூடத்தைக்
கொளுத்த லானார்.
கைகூப்பி வழியெல்லாம்
வணங்க லானார்.
கடவு ளைப்போல் மாகவியைக்
கருத லானார்.
“பாரதத்தாய் நலமுடனே
வாழ்க ! வாழ்க !
பாரதியார் புகழ்வாழ்க !
வாழ்க !” என்றே
குழந்தைகளும் பெரியோரும்
கூடி ஒன்றாய்க்
குரல்எழுப்பி, உணர்ச்சியுடன்
முழங்கும் போது,
“பாரதத்தாய் நலமுடனே
வாழ்க ! வாழ்க !
பாரதியார் புகழ்என்றும்
வாழ்க ! வாழ்க !”
எனஅந்தச் சேவகரும்
உணர்ச்சி யோடே
எங்களுடன் வாய்விட்டுப்
பாட லானார்.
‘இந்தியரே நாமும்’ என
அந்த நேரம்
எண்ணியதால் தமைமறந்து
பாடி னாரே !