பெண் கேட்டல்! #

பெரிய கடைவீதியில் நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவரிடம் மற்றொருவன் சென்று குறுக்கிட்டு, என்னவோ கேட்டான். அவர் நின்று, ‘பளிர்’ என்று அவன் கன்னத் தில் ஓங்கி அறைந்தார்.

அதைக்கண்ட மற்றவர்கள், ‘ஏன் ஐயா, அவரை அடிக்கிறீர்கள்?’ என்று கேட்டனர்.

அதற்கு அவர், ‘இவன் என்ன சாதி? நான் என்ன சாதி இவனுக்கு என்ன (அந்தஸ்து) தரம்? இது என்ன இடம்? வீதியில் போய்க் கொண்டிருக்கிற போதா திடீரென்று வந்து பெண் கேட்பது?’—என்றார்.

கூடியிருந்தவர்கள், அடிப்பட்டவனை நோக்கி, “ஏம்பா, இம்மாதிரித் தவறு செய்யலாமா? நம் வீட்டுப் பெண்களுடன் அவர் வீட்டுக்குச்சென்று கேட்கிறது என்ற ஒருமுறை இருக்கிறதே! இப்படி நடுரோட்டில், சே!—நீ கேட்கலாமா?”—என்றார்கள்.

அடிப்பட்டவன் கன்னத்தைத் தடவிக் கொண்டே; “நான் அவரைப் பெண் ஒன்றும் கேட்க வரவில்லை, சட்டைப் பையில் இருக்கிற பேனாவைத்தான் எழுதக் கேட்டேன். ‘பேனா’ என்றிருந்தால்: இது நடந்திருக்காது— ஆங்கிலத்தில் ‘பென்’ (Pen) என்று கேட்டதனால் வந்த வினை இது.”

இது அவர் வினை மட்டுமல்ல. பிறமொழிச் சொற் களைத் தம்மொழியுடன் கலந்து பேசுவதால் இன்னும் வரும் வம்புகள் எவ்வளவோ!

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்! #

நாற்பது ஆண்டுகட்குமுன் பள்ளிப்பாடப் புத்தகத்தில் உள்ள கதை இது.

வயதான தன் தந்தையைத் தெருத்திண்ணையில் உட்காரவைத்து, ஒரு சட்டியைக் கொடுத்து, நாடோறும் அதில் சோறு போட்டுவைத்து, அவர் உண்ணும்படிச் செய்யத் தன் மனைவியிடம் சொல்லிவைத்திருந்தான் ஒருவன்.

பல நாட்கள் இந்தத் தொண்டு நடந்துவந்தது.

ஒருநாள் சோறு போடப் போகும்போது, கிழவனிடம் அச் சட்டி இல்லை. இச்செய்தியைக் கணவனிடம் சொல்லுகிறாள் மனைவி.

சட்டி எங்கே என்று கேட்டு, அவரைத் திட்டி அடிக்கவும் கை ஓங்குகிறான் அவன். அப்போது அவன் பிள்ளை ஒடி வந்து, “அப்பா, நான் தான் அந்தச் சட்டியை எடுத்து ஒளித்து வைத்திருக்கிறேன்” என்று சொன்னான்.

‘ஏன் அப்பா?’ என்று கேட்டதற்கு, ‘சிறுவன்’ “உங்களை இம்மாதிரித் திண்ணையில் உட்கார வைத்துச் சோறு போட எனக்கு ஒரு சட்டி வேண்டாமா? அதற்காக எடுத்துப் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்” என்றான்.

மகனுடைய சொல்லைக் கேட்டு, ‘தனக்கும் இப்படி நேரிடுமோ’ என்று தந்தை பயந்தான்.

தன் தந்தைக்குத் தான் செய்யும் கொடுமைகளையே தன் மகன் தனக்கும் செய்வான் என்று அஞ்சித் திரும்பினான்; திருந்தினான்.

இக் கதை நமக்கு, ஓர் உண்மையை விளங்குகின்றது.

‘தினை விதைத்தவன் தினை அறுப்பான்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்’

இதுதான் அந்த உண்மை.

நாம் செய்கின்ற செயல்களின் பலன்களை பெரும் பாலும் இப்பிறவியிலேயே அனுபவிக்க நேரிடும் என்பதற்கு இது ஒரு சான்று.

திருடனை விரட்டிய கழுதை #

நாயை வளர்த்தான் வண்ணான். துணிகளைத் திருடாமல் காவல் காத்துவந்தது அது. ஒரு சமயம் திருட வந்தவனைக் கண்டு குலைத்தது. வீட்டுக்கார வண்ணான் விழித்துக் கொள்ளவே, வந்த திருடன் ஓடிப்போய் விட்டான். இதனால் நாயைக் கண்டு பெரிதும் மகிழ்ச்சியடைந்தான். இப்படியிருக்க.

சில நாட்களுக்குப் பின்,

வேறொரு திருடன் துணிமணிகளைத் திருட வந்தான். நாய் அங்கு இல்லை. திருடனைப் பார்த்த கழுதை சத்தம் போட ஆரம்பித்தது.

வண்ணான் எழுந்தான்; தடியை எடுத்து வந்தான். “பகலெல்லாம் உழைத்து இரவிலே தூங்குகிற என்னைத் தூங்கவிடாமல் கத்தித் தொந்தரவு படுத்துகிறாயே! இது சரியா?” என்று, அடித்து நொறுக்கினான். இதிலிருந்து ஒருவர் வேலையை மற்றொருவர் செய்யக் கூடாது என்று தெரியவருகிறது.

சில வேலைகளைச் சிலர் தான் செய்யவேண்டும் ; அந்த வேலையை மற்றவர் செய்யக்கூடாது என்பது உண்மைதானே!

அபாயமும் உபாயமும்! #

வேற்றூர்க்குப் பயணமாக நடந்து கொண்டிருக்கிறான் ஒருவன். வழியிலே பாழ் மண்டபம். அதில் இரண்டொரு தூண்கள் விழுந்தும் உடைந்தும், மண்டபத்திலே கருங்கற்கள் சில சிதைந்தும், சிதறியும் கிடந்தன.

அதைக் கண்டதும், வழிப்போக்கன், ‘இதன் உள்ளே நுழைந்து சென்றால் நம்முயிர்க்கு ஆபத்து; மண்டபத்தின் கருங்கற்கள் நம் தலைமீது விழுந்துவிடும்’ இவ்வாறு சற்று நேரம் சிந்தித்தான் சுற்று முற்றும் பார்த்தான்.

மண்டபத்தைச் சுற்றி ஒற்றையடிப் பாதை இருந்தது. அதிலே நடந்து சென்றான் இருள் கவ்வும் நேரம், செடி கொடிகள் நடுவே படுத்திருந்த பாம்பை அவன் மிதிக்கவே, அது கடித்தது; கீழே விழுந்தான்; உயிர் துடித்தது.

அப்போது ‘அவன் : நினைப்பு’

“அபாயம் வரும் என்று நம்பி ஒர் உபாயம் தேடினேன். உபாயம் தேடிய வழியிலேயே அபாயம் வந்தது. சிறிதும் சிந்திக்காமல், மண்டபத்தைக் கடந்து வந்திருக்கலாம்; இந்த அபாயமும் வந்திராது மண்டபமும் நிலைத்து நின்று கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு உபாயம் தேடியதுதான் தவறு.”

அதிகமாகச் சிந்தித்து — உபாயம் தேடியதே— அபாயமாய் முடிந்தது. இம்மாதிரி அனுபவம் தம் வாழ்க்கையில் பலருக்கு நேரிடுவதுண்டு. என் செய்வது? ‘அளவுக்கு மீறிய யோசனைகளால் ஆபத்து வருவது உண்டு’—என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

இரு கிளிகள் #

இரண்டு கிளிகளை ஒருவன் மிகச் செல்லமாக வளர்த்தான். தீனி கொடுப்பான்; சுதந்திரமாகப் பறக்க விடுவான். அவைகளும் பறந்து திரிந்து, அவனது கூண்டுக்கே திரும்பி வந்து தங்கிக்கொள்ளும்.

அவை இப்படி வளருங்காலத்திலே, ஒருநாள் வெளியே பறந்தபோது ஒரு வேடனின் வலையிலே சிக்கிக் கொண்டன. அவ் வேடன் அவ்விரண்டையும் தனித் தனியே இருவரிடம் விற்றுவிட்டான்.

வளர்த்த பாசத்தினாலே — பல நாட்கள் — அவன் — கிளிகளை வளர்த்தவன்—எங்கெங்கோ அலைந்து தேடிக் கொண்டேயிருந்தான்.

கடைசியாக ஒருநாள், தங்கி இளைப்பாறிப் போகலாம் என்று ஒர் ஆசிரமத்தின் உள்ளே நுழைந்த போது—தான் வளர்த்துக் காணாதுபோன பச்சைக்கிளிகளில் ஒன்று, ஆசிரமத்தின் கூண்டில் அடைப்பட்டிருப்பதைக் கண்டான். கண்டதும் தனது கிளியே என மகிழ்ச்சியுடன் பார்த்தான்.” அது “வாருங்க சாமி, வாருங்கோ, வந்து உட்காருங்க. ஆகாரம் என்ன சாப்பிடு நீங்க? சில நாள் ஆசிரமத்தில் தங்கிப் போங்க”—என்று சொல்லியது. தான் வளர்த்த கிளி ஆசிரமத்திலே சந்நியாசிகள் பேசும் சொற்களையே திருப்பிச் சொல்கிறது என்று எண்ணி மிகவும் களித்தான்.

மற்றொரு கிளியும் எங்கே என்று தேடிக் கண்டுபிடித்து, இதையும் சேர்த்து வாங்கிப் போகலாம் என்று அதையும் தேடினான்

சற்று தூரம் சென்றபின் அங்கே ஒரு கசாப்புக் கடையில் கிளி இருந்தது; அது தன் கிளியா எனப்பார்க்கப் போனான்.

இவனைக் கண்டதும் கிளி,

“வா ஐயா, வா, ஆட்டுக்கறி வேணுமா?— கோழிக்கறி வேணுமா?

ஆட்டுக்கறி 5 பணம், கோழிக்கறி 6 பணம்; வெட்டு, கொத்து” என்றது.

அதுவும் தான் வளர்த்த கிளிதான் என்று தெரிந்து கொண்டான்.

அவனுக்குச் சிந்தனை—

“ஒரே தாய் வயிற்றிற் பிறந்து, ஒரே ஆண்டிலே வளர்ந்த இரண்டு கிளிகள், இப்படி மாறுபட்டும் வேறுபட்டும் பேசுவதேன்?” என.

கடைசியாக, அவரவருடைய அறிவு திறமை, சொல், செயல் எல்லாம் அவரவர்களின் சுற்றுச்சார்புக்கும் சூழ்நிலைக்கும் ஏற்பவே அமைகிறது என்பதைக் கண்டு, மனமுடைந்து திரும்பினான்.

எப்படி—ஆசிரமத்தில் வாழ்ந்த கிளி?

எப்படி—கசாப்புக் கடையில் வாழ்ந்த கிளி?

இதனைக் கண்ட பின்பேனும், மக்களாய்ப் பிறந்தவர்கள் சுற்றுச்சார்புக்கும் சூழ்நிலைக்கும் அடிமைப்பட்டு விடாமல் வாழ்வதே நல்லது.

தியாகக் கதை #

‘தன்னல மறுப்பு’

வட மொழியிலே ‘தியாகம்’ என்பது—தமிழிலே ‘தன்னல மறுப்பு’ என்றாகும்.

மக்களாகப் பிறந்தவர்கள் தன்னலமற்ற வாழ்க்கை வாழவேண்டுமென்பது தமிழ்ப் பண்பாடும், தமிழர் பண்பாடும், தமிழகத்துப் பண்பாடு ஆகும்.

இதனை, ‘பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளார்; புகழெனின் உயிரும் கொடுக்குவர். தனக்கென முயலா நோன்றாள். பிறர்க்கென முயலுநர்’ என்று,

புறநாறூறு இன்றும் கூறிக்கொண்டிருக்கிறது.

‘கோழி’

கோழி தன்னை விலை கொடுத்து வாங்கியவனுக்கு முட்டைகள் இட்டு உதவி, இறுதியில் தன்னையே உண்ணும்படி, உதவி, மடிகிறது.

‘ஆடு’

காடு மலை எல்லாம் தானே அலைந்து மேய்ந்துவந்து. தன்னை விலைகொடுத்து வாங்கியவன் நிலத்திலே வந்து புழுக்கையும் நீரும் ஆகிய எருவையிட்டு, அவன் நிலத்தை விளைய வைக்கிறது இறுதியாகத் தானும் மடிந்து அவனுக்கு உணவாகப் பயன்படுகிறது.

‘மாடு’

தன்னை விலைகொடுத்து வாங்கியவனுக்காகக் காலமெல்லாம் உழைக்கிறது. அவன் போடுகிற தீனி இதன் உழைப்புக்குக் கூலியாகாது. எப்படி? எவ்வளவு (புல்), வைக்கோல்) தீனி போடுகிறானோ அந்த அளவுக்கு சாணி கொடுத்து விடும். எந்த அளவு கழுநீர் தருகிறானோ அந்த அளவு சிறுநீர் கொடுத்துவிடும்.

அன்றன்றைக்கு, அது (மாடு) பற்றுவரவு நேர் பண்ணி விடுகிறது.

அதன் உழைப்பெல்லாம் தியாகம். ஆடு கோழிகளைப் போல் அல்லாமல்,

மாடுகளின் தியாகத்தை நினைக்கும்போது, மயிர்க் கூச்செறிகிறது.

காலமெல்லாம் உழைத்து உழைத்து எலும்பும் தோலுமாகி இறந்து, அவனுக்கு உணவாகவும் பயன்படுகிறது உழவன் உரித்த அதன் தோலை மரத்திலே காய வைத்தான் —

அந்த மாட்டின் தோல் ‘சொல்கிறது’.

‘ஐயோ, கவுண்டர் தரையில் நடக்கிறாரே, அவர் காலைக் கல்லும் முள்ளும் குத்துமே—என் தோல் எதற்காக இருக்கிறது—செருப்பாகத் தைத்து போட்டுக் கொண்டு நடக்கலாமே’—என்று சொல்கிறது.

அவ்வளவு தியாகம் மாடுகளுக்கு.

இவையனைத்தும் கதையல்ல.

உண்மை நடைமுறை.

இவைகளைப் பார்க்கும்போது—

மக்களாகிய நாம் என்ன தியாகம் செய்கிறோம்? என்பதை சிந்தித்துப் பார்ப்பது நலமாகும்.

இன்னும் இதை அறிவுறுத்தவே— எல்லாச் சமய வழிபாடுகளிலும், சில தியாகப் பொருள்களைக் கையாண்டு வருகிறார்கள்.

முஸ்லீம் சமுதாயத்தில், ஊதுபத்தி கொளுத்தி வைத்து ‘பாத்தியா’ எனும் இறைவழிபாடு நடக்கும். பாத்தியா முடிந்ததும் இதற்குப் பேருதவி செய்த ஊதுபத்தி அங்கே இருக்காது. எரிந்து சாம்பலாகிக் கிடக்கும்.

கிறித்தவ சமுதாயத்தில், ‘மெழுகுவர்த்தி’ கொளுத்தி வைத்து இறைவழிபாடு நடக்கும். செபம் முடிந்ததும் அதற்குத் துணையாக இருந்த மெழுகுவர்த்தியை அங்கே காணமுடியாது: தன்னையே அது அழித்துக்கொள்ளும்.

இந்துக்களின் கோவில்களிலே, சூடம் ஒரு கட்டிகொளுத்திவைத்து இறைவழிபாடு நடைபெறுகிறது. வழிபாடு முடிந்ததும், அதற்குப் பெருந்துணை செய்த சூடத்தைக் காணமுடியாது. அது தன்னையே அடியோடு அழித்துக்கொள்ளும்.

இவையனைத்தையும் பார்க்குபோது — மக்கட் சமுதாயத்துக்கு — தியாக வாழ்க்கை இன்றியமையாதது என்பதை அறிவறுத்தவே—எல்லாச் சமயச் சான்றோர்களும் இத் துணைப் பொருட்களைக் கையாண்டிருக்கின்றனர் எனத் தெரியவருகிறது.

‘மழை’

மழை நீரைப் பற்றிச் சிந்திப்போம்.

மழை உணவு தானியங்களையெல்லாம் விளைய வைத்துக் கொடுத்து, நீ அதிகமாக உணவு உட்கொள்ள அதற்குத் துணையாகக் காய்கறிகளையும் விளைய வைத்துக் கொடுத்து, இவை இரண்டையும் சேர்த்து உண்ணுகிறவருக்கு விக்கல் எடுத்தால்,

‘அடே நான் இருக்கிறேன்—என்னைக் குடித்துப் பிழைத்துக்கொள்’ என்று, அந்நேரத்தில் அவனுக்கு உதவி, அவன் வயிற்றிலே போய் விழுந்து உணவாகமாறி மடிந்துவிடுகிறது. இந்தக் கருத்து வெளிப்படவே திருவள்ளுவர்.

‘துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
‘துப்பா யதூஉம் மழை,’
—என்ற குறளில் நமக்கு விளக்கிக் காட்டுகிறார்.

பகுத்தறிவு பெற்ற மக்களாகிய நாம், நீரினிடத்தும், விலங்குகளிடத்தும், பறவைகளிடத்தும், உயிரில்லாத (சடப்) பொருள்களிடத்தும் காணப்படும் தியாக வாழ்வை நினைத்தாவது தியாகவாழ்வு வாழ்வது நலமாகும்.

ஏனெனில்,

‘“வையத்துள் வாழ்வாங்கு வாழ்வது”’
என்ற வள்ளுவரின் வாக்கு, பிறரை வாழவைத்து வாழ்வது என்பதும், பிறர் வாழ்வுக்குத் தான் துணை புரிந்து வாழ்வது என்பதுமாகும்.

இன்சொவின் சிறப்பு #

தன் ஒரே மகன் திடீரென்று இறந்துவிடவே. துயரம் தாங்காமல் வருந்திய ஒரு தந்தை, புத்த பகவானை அணுகி, எப்படியாவது தன்னுடைய மகனை உயிரோடு எழுப்பிக் கொடுக்கும்படி வேண்டி அழுதான்.

புத்தர் என்ன செய்வார்? அவரால் எழுப்பிக் கொடுக்க முடியும். இருந்தாலும் பிணத்தைத் தூக்கிக் கொண்டு எல்லோரும் இதே வேலையாக வர ஆரம்பித்து விட்டால் பிணங்களை எழுப்புவதைத்தவிர புத்தர் பெருமானுக்கு வேறு என்ன வேலை இருககமுடியும்? அது மட்டுமல்லாமல், சிலரை எழுப்ப மறுத்தால் பொல்லாப்பும் பகையும் ஏற்பட்டுவிடும என்பதெல்லாம் நமக்கு நன்கு விளங்குகிறது.

ஆனால் புத்தர் என்ன செய்தார் தெரியுமா? மிக அன்புடன், அவனிடம் “இந்த ஊரில் சாவு நேராத வீட்டிலிருந்து கொஞ்சம் கடுகு வாங்கி வா! உன் மகனை நான் எழுப்பித் தருகிறேன்” என்றார்.

அவன் வெகு மகிழ்ச்சியாக ஓடினான். ஒவ்வொரு வீடாகப் போய்ச் சாவு நேராத வீட்டைத் தேடினான், கடுகு வாங்குவதற்காக . ஆனால். அவனுக்குக் கிடைத்த பதில் எல்லாம் “என் தாய் இறந்துவிட்டாள்; தந்தை இறந்திருக்கிறார்: தங்கை , தமக்கை, பிள்ளை, பேரப்பிள்ளை என்று ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒருவர் அல்லது பலபேர் இறந்திருக்கிறார்கள்” என்பது தான்.

இப்படி ஊர் முழுவதும் அலைந்து திரிந்த பிறகுதான், ‘சாவை யாராலும் தடுக்க முடியாது; எல்லோருக்கும் ஏற்படும் துன்பம்தான் நமக்கும் ஏற்பட்டுள்ளது’ என்ற உண்மையை உணர்ந்தான். திரும்பவும் புத்தரிடம் போகும் எண்ணத்தையே கைவிட்டுவிட்டான்.

புத்தர் பெருமான் அவர்களது இனிய போதனை அவனுக்கு உண்மையை உணர்த்திவிட்டது.

இதைப் படிக்கும் நாமும், நம்மால் முடியாத காரியத்தைச் செய்யும்படி நம்மை யாரேனும் வேண்டினால், கடுஞ்சொற்களைச் சொல்லி அவர்கள் மனத்தைப் புண்படுத்தாமல், இனிய சொற்களால் அவர்களே உண்மையை உணரும்படி செய்வது நல்லது.

பொதுத் தொண்டு #

நான் ஒருமுறை பெங்களுர் சென்றிருந்தபோது, 95 வயதைத் தாண்டிய ‘சர். விசுவேசுவர ஐயா’ அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. ஒரு கன்னட நண்பரின் துணையோடு பார்க்கச் சென்றிருந்தேன். அவரிடம், என்னைப் “பொதுத் தொண்டு செய்பவர்” என்று நண்பர் அறிமுகப்படுத்தி வைத்தார்.

பழுத்த பழமாகச் சாய்வு நாற்காலியில் படுத்திருந்த சர். விசுவேசுவர ஐயா அவர்கள், “பொதுத் தொண்டா? பொதுத் தொண்டா” என்று இரண்டுமுறை சொல்லி, “அது மிகவும் கடினமாயிற்றே? இவரால் அது எப்படிச் செய்யமுடிகிறது? என்று வியப்புடனே கேட்டார்.

அப்போது அவர் கேள்வியின் கருத்து எனக்கொன்றும் விளங்கவில்லை சர். வி. ஐயா அவர்கள் உடனே விளக்கத் தொடங்கினார் :

நான் அரசாங்க வேலையாக மேட்டூருக்குச் சென்றிருந்த சமயம் திரும்பி வந்துகொண்டிருந்தேன். வழியில் ஐந்து மைல் தூரத்தில் நண்பர் வீட்டுத் திருமணம். அதற்கும் செல்லவேண்டியிருந்தது. டிரைவர் அந்தப் பாதையில் வண்டியைத் திருப்பினார். எனக்கு உடல் எல்லாம் நடுங்கிவிட்டது. ஏனெனில், நான் சென்றது அரசாங்க வண்டி. அதை எப்படி என் சொந்த, வேலைக்குப் பயன்படுத்தலாம்?

“ஆகவே டிரைவரைக் கோபித்து, வண்டியைத் திருப்பி 20 மைல் தூரம் உள்ளே என் இருப்பிடத்திற்கு வந்து, பின்பு என் சொந்தக் காரை எடுத்துக்கொண்டு திருமணத்திற்கு சென்று வந்தேன். அதுதான் என் மனத்திற்கு நிம்மதியைத் தந்தது” என்று கூறினார். இன்னொன்று.

“நான் வேலை பார்க்கும் காலத்தில் எனது மேசையில் 2 பேனாக்கள் இருக்கும் அரசாங்க வேலைகளுக்கு தனிப் பேனாவும், என் சொந்த வேலைகளுக்கும், உறவினர் நண்பர்களுக்கு வரையும் கடிதங்களுக்கும் என் சொந்தப் பேனாவும் பயன்படுத்துவேன்’ என்று கூறி— என் பக்கம் திரும்பி, தாங்கள் வந்த செய்தி என்ன?” என்று கேட்டார்.

“நான் வந்த வேலை முடிந்துவிட்டது. பொதுத் தொண்டு செய்வது எப்படி?—என்ற பாடத்தை, இன்று முதல் முதலாகத் தங்களிடம் கற்றுக் கொண்டேன்” என்று கூறி, மகிழ்ச்சியோடு விடை பெற்றுக் கொண்டேன். இது என் பொதுவாழ்க்கைக்கு மிகவும் பயன்பட்டது.

இதனைப் படிக்கிற உங்களுக்கும் இது பயன் பட்டால் நான் பெரிதும் மகிழ்வேன்.

கோவில் சொத்து #

தைப்பூசத் திருவிழா! எல்லாக் கோவில்களில் இருந்தும் காவிரி ஆற்றுக்குச் சுவாமி புறப்பாடு உண்டு. திருச்சி, பூலோகநாதர் சுவாமி கோவிலிலிருந்தும் சுவாமி புறப்பட்டது. நானும் என் தமையனார் ஒருவரும், கொடியைச் சுருட்டி சுவாமி கூடவே தூக்கிக் கொண்டு சென்றோம். அன்று அதற்குக் கூலி அரையணா; இன்றைய மூன்று காசு. ஆற்றுக்குப் போய்த் திரும்பவும் கோயிலுக்குக் கொடியைக் கொண்டு வந்து சேர்த்தோம் அப்போது மாலை மணி ஏழு இருக்கும். எங்களுக்கு இன்னும் காசு தரவில்லை யாதலால் எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.

அந்தச் சமயம், கோவிலில் எரியும் விளக்கு அணையும் நிலையிலிருப்பதைப் பார்த்த என் தமையன், சென்று அதைத் தூண்டிவிட்டார்.

அதைப் பார்த்துக்கொண்டிருந்த என் தந்தை, அவரை ஓங்கி முதுகில் ஒர் அறை அறைந்தார், அடி பட்ட அண்ணன் விபரம் தெரியாமல் திடுக்கிட்டு விழித்தார்.

பக்கத்திலிருந்த ஒருவர், என் தந்தையிடம்— “பையனை ஏன் அடித்தீர்கள்?” அவன் விளக்கைத் தூண்டியது தவறா?” என்று கேட்டார்.

அதற்குத் தந்தை, “விளக்கைத் தூண்டியது குற்றமில்லை; அதைக் குச்சியால் அல்லவா தூண்ட வேண்டும், பிறகு அதையும் அந்த விளக்கிலேயே வைத்துவிட வேண்டும். இவன் விரலால் தூண்டிவிட்டுக் கையைத் தலையிலே தடவிக்கொண்டானே! அது கோவில் எண்ணெய் அல்லவா? ‘சிவன் சொத்து குல நாசம்’ என்று நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?” என்றார்.

எங்களுக்கு அன்று இந்தச் சம்பவம் ஒரு படிப்பினையாக அமைந்தது.

இன்று? திருக்கோயில் சொத்துக்களையே தம் சொத்தாக நினைத்து வாழ்க்கையை நடத்துகிற அன்பர்களுக்கெல்லாம், இது பயன்படுமானால் நான் பெரிதும் மகிழ்வேன்.

தலைத் தீபாவளி #

தலைத் தீபாவளிக்கு மகளையும் மாப்பிள்ளையையும் அழைக்கவந்த சம்பந்தியிடம். “உங்கள் மகளை மட்டும் இப்போது அழைத்துப் போங்கள். மாப்பிள்ளையைப் பிறகு அனுப்பிவைக்கிறோம்” என்றார் பையனின் தந்தை அவரும், தன் மகளுடன் புறப்பட்டுப் போய் விட்டார்.

பிறகு ஒருநாள். தந்தை தன் மகனை அழைத்து, “இப்போது நீ தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டுக்கு. சந்தோஷமாகப் போய் வா. “பெரியவர்களைக் கண்டால் வணங்கு” என்று அறிவுரை கூறி அனுப்பினார்.

அவனும் இது மறக்காமலிருக்க மார்பிலே குத்திக் கொண்டு மனப்பாடம் செய்துகொண்டே போனான்.

வழியில், ஒரிடத்தில், நாட்டாண்மைக்காரர் ஒருவர் பஞ்சாயத்தில் விசாரணை செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இவனையும், இவன் பேச்சையும் கேட்டு, “என்னினும் பெரியவர் யாரடா? ‘என்னைப் கண்டு அஞ்சடா”’ என்று சொல்லவே,

தந்தை சொன்னதை மறந்து, இப்படியே சொல்லிக் கொண்டு போகும்போது, வழியில் திருடர்கள் கூட்டம் ஒன்று, அவர்கள் களவாடிய பொருள்களைப் பங்கிட்டுக் கொண்டிருக்கும் சமயம், இவனைப் பார்த்துவிட்டார்கள். முதலில் பயந்த அவர்கள், பிறகு இவன் பேச்சைக் கேட்டுச் செம்மையாக உதைத்து, ‘“இதையும் கொண்டு வந்து வைத்து இன்னொன்றையும் கொள்ளையடிச்சு வரணும்”’ என்று அவர்கள் கூறினர்.

இப்போது, இதுவே அவனுக்கு மனப்பாடமாகச் சொல்லிக்கொண்டே சென்றான். அந்த வழியில் ஒரு கிராமத் தலைவருக்கு இரட்டைக் குழந்தை. அதில் ஒன்று விஷக் காய்ச்சலில் இறந்துவிடவே, அதைப் பாடையில் எடுத்து வந்து கொண்டிருந்தனர். இதையறியாத மாப்பிள்ளை, “இதையும் கொண்டு வந்து வைத்துவிட்டு, இன்னொன்றையும் கொண்டுபோகணும்” என்று சொல்வதைக் கேட்ட கிராமத் தலைவன் திகிலடைந்து, நன்றாக உதைக்கச் செய்து, “இன்னும் ‘விருத்தியாகணும்”’ என்று சொல்லச் செய்தான்.

இவனும் இப்படியே சொல்லிக்கொண்டு போக, அடுத்த ஊரில் மணப்பந்தல் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. எல்லோரும் அதை அணைக்க முயலும்போது, இவன் மட்டும், இன்னும் விருத்தியாகணும்’ என்று கூறவே, அங்கிருந்தவர்கள் ‘“தண்ணீரை ஊற்றித் தடியால் அடிக்கச்”’ சொல்லாமல் இப்படிச் சொல்கிறானே என்று சொல்லி நன்றாக உதைத்து அனுப்பினார்கள்.

பிறகு அதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டு சென்றான். அங்கு ஒரிடத்தில் குயவன் தன் மகனுக்கு மண்ணைப் பிசைந்து சட்டி பானை செய்யப் பழகிக் கொண்டிருந்தான். இவன் அங்குப்போய். ‘தண்ணீரை ஊற்றித் தடியால் அடிக்கணும்’ என்று சொல்ல, குயவனும் இவனை நையப் புடைத்து ‘“அரைப் படி முக்கால் படி, ஒரு படி”’ என்று பானைகளை சுட்டிக் காண்பித்தான்.

மிகவும் வேதனையுடன் ஒரு வழியாக மாமனார் ஊர் வந்து சேர்ந்தான். அங்கே ஆற்றங்கரையில் வழவழ. வென்று மழித்த தலையுடன் நாலைந்து பேர் வரிசையாக அமர்ந்து இறைவனை வழிபட்டுக் கொண்டிருக்கவும், உடனே, இவனுக்குப் பானை நினைவு வந்துவிட்டது. உடனே, ஒரு வாழை மட்டையை எடுத்து, ஒவ்வொருவரை யும், இது அரைப்படி இது முக்கால்படி, இது முழுப்படி என்று தட்ட ஆரம்பித்தான்.

இதை எதிர்பாராத அவர்கள், அலறிப் புடைத்து எழுந்து, அவன் செயலைக் கண்டு இரங்கி, “அடேய்? ‘பெரியவர்களைக் கண்டால் வணங்க வேண்டும்”’ என்று கூறினர்.

அப்போதுதான், இவனுக்குத் தன் தந்தை கூறியது நினைவுக்கு வந்தது. மறுபடியும் அதைச் சொல்லிக் கொண்டே மாமியார் வீடு போய்ச்சேர்ந்தான்.

மருமகனது பேச்சையும், அவனது உடம்பையும் கண்ட மாமனார்க்கு, அவனது “அறிவுக் கூர்மை” நன்கு விளங்கியது. பெரிதும் வருந்தினார்.

Scroll to Top