கல்வியும் கல்லாமையும் #
கவிராஜர் ஜெகவீர பாண்டியனார் ஒரு பெரும் புலவர். கட்டபொம்மன் மரபிலே வந்தவர். மிகவும் சிறந்து விளங்கிய தமிழ்ப் பெருங்கவிஞர்.
ஒருநாள் மதுரையிலே நான் அவருடன் பேசிக் கொண்டிருந்த சமயத்தில்,
சிற்றுாரிலிருந்து அவரைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார். அவரைக் கண்டதும் ஜெகவீர பாண்டியர் என்னோடு பேசுவதை நிறுத்திவிட்டு,
‘வாருங்கள், அமருங்கள், என்ன செய்தி?’ —என்று கேட்டார்.
அதற்கு அவர், ‘ஒன்றுமில்லை, தங்களைப் பார்க்க வந்தேன்!’ என்றார். ‘பார்த்தாயிற்றே; பின் என்ன செய்தி’ என்று மறுபடியும் கேட்டார். வந்தவர் அதற்கும், திரும்பத் திரும்ப—
‘ஒன்றுமில்லை, தங்களைப் பார்க்க வந்தேன் என்றே சொன்னார். கவிராஜர் சிறிது யோசித்து — சற்றுப் பேசி அனுப்ப எண்ணி, ‘தங்களுக்குக் குழந்தை உண்டா?’ என்று கேட்டார். ‘இருக்கிறான், ஒரே பையன்’ —என்றார் வந்தவர். ‘என்ன படித்திருக்கிறான்?—என்று இவர் கேட்க—வந்தவர் ‘எங்கே படித்தான், ஒன்றும் படிக்கவில்லை’ என்று. சொல்ல, கவிஞர்— ‘என்ன செய்கிறான்?— என்று கேட்க, அவர் — ‘வீட்டிலே இரண்டு எருமைகள் மேய்த்துக் கொண்டிருக்கிறான்’ என்று சொன்னார். உடனே கவிராயர் எழுந்து, அவரை எழச்செய்து, தட்டிக் கொடுத்து, வெளி வாயிற்படி வரை அழைத்துக் கொண்டு போய் நின்று,
‘இனி யாராவது உங்களுக்கு எத்தனை எருமைகள்’ என்று கேட்டால், ‘இரண்டு’ என்று சொல்ல வேண்டாம். மூன்று எருமைகள் உண்டு என்று சொல்லுங்கள்’ என்று சொல்லி அவரை வழியனுப்பி விட்டார்.
கல்லாமையின் இழிவைக் கவிஞர் உணர்த்தியது — காலம் பல கடந்தும் என் உள்ளத்தை விட்டு அகலவில்லை.
கருமியும் தருமியும் #
இரண்டு பெருஞ்செல்வர்கள் ஒர் ஊரிலே வாழ்ந்து வந்தார்கள். ஒருவன் தருமி; மற்றவன் கருமி, ஒரே நாளில் இருவருமே இறந்து விட்டனர். அவ்வூரினர் திரண்டு வந்து இரண்டு பிணத்தையும் ஒரே நேரத்தில் எடுத்துச் சென்று சுடுகாட்டில் எரிக்கச் செய்தனர், இரண்டு சடலங்களும் தனித்தனியே எரிந்து கொண்டிருக்கின்றன.
அப்போது தருமியின் உடலைச் சுற்றிச் சூழ்ந்து. ஊரில் உள்ள யாவரும்,
‘ஐயோ அள்ளிக் கொடுத்த கை எரிகிறதே,
இன் சொல் கூறி வாழ்த்திய வாய் எரிகிறதே,
எல்லோரும் வாழ எண்ணிய நெஞ்சு எரிகிறதே.’
என்று அழுது புலம்பிக் கொண்டிருந்தனர்.
ஆனால், கருமியின் சடலம் எரியும் இடத்திலோ ஒருவர் கூட இல்லை.
வள்ளுவர் ஒருவர் மட்டும் நின்று மிகத் துடி துடித்துப் பதறி அழுது கொண்டிருந்தார். ஊரவர் எல்லார்க்கும் வள்ளுவர்மேல் கோபம் வந்தது.
அவர்களிலே ஒருவன் துணிந்து, ‘தங்களிடம் கேட்கக் கூடாதுதான், என்றாலும் கேட்கிறேன்—என்று சொல்லி,
‘நாங்கள் எல்லாம், தருமி சடலம் பற்றி எரிகிறதே என்று இங்கே நின்று அவன் புகழ் பெருமை சொல்லி அழுகின்றோம்’— கருமி எரியும் இடத்திலே நீங்கள் மட்டும் நின்று அழுகிறீர்களே, என்ன காரணம்? என்று கேட்டு விட்டான்.
அதற்கு வள்ளுவர்— “இன்பத்திலே ஈத்துவக்கும் இன்பம் என்று ஒன்று உண்டு. இல்லாத மற்றவர்கட்குத் தன் பொருளை வாரி வழங்கிப், பெற்றுக் கொண்ட மக்களின் முகம் மலர்ந்து மகிழ்ச்சியடைவதைக் கண்டு தாம் மகிழ்ச்சியுறுவது—அந்த இன்பம் எப்படி இருக்கும் என்பதை (தருமி) அவன் வாழ்நாள் முழுதும் செய்து மகிழ்ந்து, மகிழ்ந்து—சவித்துப் போய் எரிகிறான்.
இந்தப் பாவிப் பயல் (கருமி) அவ்வின்பம் எப்படி இருக்கும் என்று அறியாமலே மரித்து எரிகின்றானே ஐயோ—என்று, அலறி அழவேண்டிய இடம், அது வல்ல; இது—என்றார்.
அன்று வள்ளுவரால் ‘ஈகையின் சிறப்பு’ ஊரார் எல்லோர்க்கும் உணர்விலே தைத்து ஊன்றியது. பின் ஈத் துவக்கும் இன்பத்திலே திளைத்து வாழ்ந்தனர்.
நாம் இன்றுதான் உணர்கின்றோம். நாம் அப்படி வாழ்கின்றோமா? இனியேனும் வாழ்வோமா?
—எனச் சிந்திக்கச் செய்கிறது. இக் குறள்.
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர் — குறள்
கருமித்தனமும்_சிக்கனமும் #
பள்ளி வாசல் கட்டவேண்டுமென்று எண்ணிய மவுல்வி நபி நாயகமவர்களிடம் சென்று பொருள் வேண்டு மென்று கேட்டார். அவர் ஒரு செல்வனைக் குறிப்பிட்டு அவனிடம் கேட்டுப் பெறும்படி அனுப்பினார்.
அப்படியே மவுல்வியும் செல்வனைக் காணச் சென்ற போது, அங்கே —
“வேலைக்காரனைக் கையை மடக்கி மரத்தில் வைத்துக் கட்டி—குத்து 10 குத்திக் கொண்டிருந்தான் செல்வன். ‘ஏன் இப்படி’—என்று அருகில் உள்ளவரைக் கேட்க,
“வேலைக்காரன் கடையில் பருப்பு வாங்கி வரும் போது வழியில் 10 பருப்பு சிந்திவிட்டானாம், அதற்காக 10 குத்துகள் அவனைக் குத்திக் கொண்டிருக்கிறான் செல்வந்தன்” என்றான்.
—இது கேட்டதும், மவுல்வி பயந்து, பணம் கேட்காமலே திரும்பி வந்து விட்டார். பின், நபி பெருமானார் மவுல்லியை ‘செல்வன் எவ்வளவு கொடுத்தான்?’ என்று கேட்க,
“அங்கே செல்வன், தன் வேலைக்காரன் பத்து பருப்பு சிந்தியதற்குப் பத்து குத்து குத்திக் கொண்டிருந்தான். அதைப் பார்த்துப் பயந்து நான் கேட்காமலே திரும்பி வந்துவிட்டேன்”—என்றார்.
“இப்போது போய்க் கேளும்” —என்று நாயகத்தின் கட்டளை பிறந்தது.
மவுல்வி—சிறு நடுக்கத்துடன் அப் பணக்காரனிடம் போனார். அப்போது அங்கே, அவன்,
ஒரு வேலைக்காரனைத் தூணிலே கட்டிவைத்து சவுக்காலே அடித்து—10 சொட்டு இரத்தம் எடுக்க அடித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அது என்ன என்று பக்கத்தில் உள்ளவர்களைக் கேட்க,
‘அவன் எண்ணெய் வாங்கி வரும்போது 10 சொட்டு சிந்திவிட்டான். அதற்கு அவன் உடலிலே ரத்தம் 10 சொட்டு எடுக்கச் சவுக்கால் அடிக்கிறார்கள்’—
இது சொல்லக் கேட்டதும் மவுல்வி நடுங்கி, பணக்காரனிடம் சென்று கேட்காமல் திரும்பினார். நாயகமிடம் வந்தபோது—
‘எவ்வளவு பணம் கொடுத்தார்?’ என்று பெருமானார் கேட்கவே—சவுக்கால் அடித்து ரத்தம் எடுத்த கதையைச் சொல்லி,
இம்மாதிரிப் பேர்வழிகளிடம் சென்று, நல்ல காரியத் துக்கு (பள்ளி வாசல் கட்ட) பணம் கேட்க நாவு கூசுகிறது. அச்சமாக இருக்கிறது—பயந்து வந்து விட்டேன் என்று மவுல்வி சொன்னதும், ‘மீண்டும் போய்க் கேளும்’—என்று பெருமானார் உத்தரவிடவே,
மவுல்வி சென்றார். நல்ல வேளையாக, அங்கே கடு நிகழ்ச்சியொன்றும் நடைபெறவில்லை. செல்வந்தனைக் கண்டதும், அன்புடன் வரவேற்று, வந்த காரியம் என்ன?” என வினவினான்.
தான் பள்ளிவாசல் கட்டிக் கொண்டிருப்பதாகவும் அதற்குப் பொருள் வேண்டி வந்திருப்பதாகவும் மவுல்வி கூறினார்.
செல்வர் கேட்டார்—’அந்த ஊரில் பள்ளி வாசல் இல்லையா?’
மவுல்வி — ‘ஆமாம்: இல்லை.’
செல்வர் — ‘என்ன செலவாகும்?’ என்னிடம் எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள்?’——
மவுல்வி — செலவு (பள்ளி வாசல் கட்ட) ஒரு லட்ச ரூபாய் ஆகும்.
நம் ஊரைச் சுற்றியுள்ள சிலர் 50,000 ரூ. வசூலிக்க முடிவு செய்துள்ளனர். தாங்கள் ஒரு பெருந் தொகையாக ரூ. 50, 000 கொடுத்தால் நல்லது என்று சொன்னார்.
உடனே அப்பணக்காரர், ஒரு லட்ச ரூபாயும் மவுல்வியிடம் கொண்டு வந்து கொடுத்து,
“உடனே பள்ளிவாசல் கட்டத் தொடங்குங்கள் மற்றவர்களிடம் சென்று பணம் வசூலிக்க—காலத்தைக் கடத்திக் கொண்டிருக்க வேண்டாம்—”
“நல்ல பணியை உடனே செய்யுங்கள்”—என்று கூறி அனுப்பினார்.
மவுல்விக்கு—‘என்னடா இது?— என்று தலை சுற்றியது.
10 பருப்பு சிந்தினதற்கு 10 குத்து குத்தினான்.
10 சொட்டு எண்ணெய்க்கு 10 சொட்டு இரத்தம் எடுக்க சவுக்கால் அடித்தான்.
—இப்படிப்பட்ட கருமி—நாம் ரூ. 50,000 கேட்டால், ஒரு லட்சம் எடுத்துக் கொடுக்கின்றானே—‘இது என்ன விந்தை?’
என்று வியந்து எண்ணிக் கலக்கமுற்று, நபி பெருமான் அவர்களிடம் சென்று,
‘கருமியின் நடத்தை புரியவில்லையே, காரண்ம் என்ன?’—என்று மவுல்வி கேட்டார்.
பெருமானார் :
‘நீ அவனைக் கருமி என்று நினைத்தது தவறு—அவன் எந்தப் பொருளையும் பாழாக்காமலும் வீணடிக்காமலும் சிக்கனமாக இருந்து பொருள்களைச் சேமித்து வைத்ததனால்தான் செல்வம் சேர்க்க முடிந்தது. இப்படி நல்ல காரியத்துக்கு அள்ளி வழங்கவும் முடிந்தது—என்று விளக்கமாக எடுத்து விளம்பினார்.
நபியின் விளக்கம் கேட்ட பின்பு—சிக்கனம் வேறு, கருமித்தனம் வேறு—என்பது மவுல்விக்குப் புரிந்தது.
‘நமக்கு புரிந்ததா!’
எட்டு மைல் தூரம் உள்ள ஊருக்கு 20 ரூபா தந்து (டாக்சி) வாடகை வண்டி ஏறிப்போவது ‘இடம்பம்’. அதே தூரத்து ஊருக்கு பேருந்து (பஸ்) போகிறது என்றால் 50 காசு கொடுத்து அதில் ஏறிப் பயணம் செய்வது ‘சிக்கனம்’.
அதுவும் கொடுப்பது ஏன் என்று 5 காசுக்கு அவல் கடலை வாங்கித் தின்று கொண்டே நடப்பது ‘கருமித்தனம்’
ஐநூறு, ஆயிரம் ரூபா என்று விலையுள்ள பட்டாடை புடவைகளை வாங்கிக் கட்டி வாழ்வது ‘டம்பம்’
தூய்மையான எளிய—அழகான ஆடை (புடவை) அணிவது ‘சிக்கனம்’.
அப்படியின்றி, அழுக்குடையும் கிழிசல் துணியும் தையல் தெரியும்படி உடுத்திக் கொண்டே இருப்பது ‘கருமித்தனம்’.
இவ்வாறாக, நமக்கு ஏற்ற முறையில் நம் உள்ளத்தில் பதியவைத்துக் கொண்டால், நம் வாழ்விலே ஒளியும் மகிழ்ச்சியும் உண்டாகும், —
இதற்கும் இலக்கணம் உண்டு.
அஃது—தேவைக்கு மேல் செலவு செய்வது ‘இடம்பம்’
தேவையின் அளவு செலவு செய்வது ‘சிக்கனம்’
தேவைக்கும் செலவு செய்யாதது ‘கருமித்தனம்’
இதிலிருந்து சிக்கனம் எது?
கருமித்தனம் எது?—என்று நமக்கு நன்றாகப் புரிகின்றது.
நமக்கு மட்டும் புரிந்து…என்ன? நம் இல்லத்தில்
உள்ள ஒவ்வொருவருக்கும் புரியவைத்து—வாழ வைப்பதே நல்லது.
கண்டதும்_கேட்டதும் #
மேலை நாட்டிலே எழுத்தாளன் ஒருவன்—அவன் நூல்கள் மிக வேகமாகப் பரவின. எல்லோரும் படிக்க விரும்பினர். அவனுக்குப் புகழ் மேலும் மேலும் ஓங்கியது.
இத்தனைக்கும் அவன் ஒரு படிப்பாளியும் அல்லன்: பட்டதாரியும் அல்லன்; எழுத்தாளனுமல்லன்; பேச்சாளலுமல்லன்; ஒரு குதிரை வண்டி ஒட்டுபவன்.
பத்திரிகை நிருபர்கள் அவனிடம் நெருங்கி— ‘உனக்குத்தான் படிக்கத்தெரியாதே? நீ படித்ததில்லையே? எப்படி நூலாசிரியன் ஆனாய்? இவ்வளவு பெருமை, புகழ்ச்சி எங்கும் பரவி வருகிறது. பெரிய பட்டதாரிகளும் எழுத்தாளர்களும் உன்னைக் காணப் பொறாமைப் படுகிறார்களே! நீ எழுதிய முதல் நூல் எது?—என்று கேட்டார்கள்.
அதற்கு அவன்—
நான் எழுதிய முதல் நூலின் பெயர்— ‘கண்டதும் கேட்டதும்’—என்று சொன்னான்.
பத்திரிகை நிருபர்கள் திரும்பிப் போய்விட்டார்கள்.
இதிலிருந்து தெரிவது என்ன?
அவன் வெற்றி யடைந்த வழி :
அவன் ஒரு வண்டியோட்டி. பலரும் வண்டியில் பயணம் செய்வார்கள். எல்லோரும் பேசிய (அவரவர் குடும்ப) சங்கதிகளை எல்லாம் கேட்டு, அதையே ஒரு நூலாக எழுதியிருக்கிறான்.
வண்டியில் பயணம் செய்யும் போது—பெரும்பான்மையோர் வண்டியோட்டி—அவன் ஒரு மனிதன் வண்டிக்குள் இருப்பதாகவே நினைப்பதில்லை. தாங்கள் மட்டுமே இருப்பதாக எண்ணிக்கொண்டு, எந்த நிகழ்ச்சிகளையும்—இரகசியங்களையும் பேசி விடுகிறார்கள். ஏழை முதல் பணக்காரர் வரையுள்ள பலரது வாழ்க்கை—நடைமுறை—சிக்கல்—அல்லது— துயரம் எல்லாம் எப்படி எப்படி வாழ்கிறார்களோ—அவையெல்லாம் கேட்டுள்ளதனால்—அப்படியே நூலாக எழுதவே—எல்லோருடைய உள்ளத்திலும் நன்கு தைத்தது.
“தங்கள் வாழ்க்கையோடு அது மிகவும் ஒட்டியிருக்கிறது. தெரியாத செய்திகள் பல தெரிய வைக்கப்படுகின்றன. புரியாத செய்திகள் புரிய வைக்கப்படுகின்றன.”
ஆகவே, அவன் எழுதிய முதல் நூல் பல லட்சக்கணக் கான (படிகள் பிரதிகள்) விற்பனை யாயின.
அவன் பெரிய எழுத்தாளன் ஆனான்.
அடுத்த பதிப்புகள் பல லட்சக்கணக்கில் விற்பனை யாகாமல் என்ன செய்யும்?
நல்ல எழுத்தாளனாக, நூலாசிரியனாக விளங்க ஒருவன் படிப்பாளியாக பட்டதாரியாக வேண்டுமென்பதில்லை; அனுபவம் ஒன்றே போதும் எனத் தெரிகிறது.
கொள்ளும் குத்து வெட்டும் #
அழுக்கு மூட்டைகளை இறக்கியபின் கழுதைகளை முன்னங்கால்களை மட்டும் கட்டி மேயவிட்டான் சலவைத் தொழிலாளி. அவை வெளியில் போய் மேய்ந்து கொண்டிருந்தன.
அப்போது அவ்விடத்தில் குதிரைப்படை ஒன்று வந்திறங்க, குதிரைகளின் சேணத்தை இறக்கி, கொள்ளும் புல்லும் கொடுத்து, அவற்றின் அலுப்புத்தீர உடல்களைத் தேய்த்தும் விட்டனர் போர்வீரர்கள்.
இதுகண்ட கழுதைகள், இவையும் நம்மைப் போல் தான் இருக்கின்றன. இவைகளுக்கு மட்டும் என்ன கொள்ளு, புல்லு, தேய்ப்பு, சிறப்பு! நமக்கும் இம்மாதிரி எல்லாம் செய்ய வேண்டும் என நம் எஜமானரிடம் நாம் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தன.
சற்று நேரத்திலேயே வேறொரு குதிரைப்படை அங்கே வந்தது; போர் மூண்டது.
பல குதிரைகளுக்கு குத்தும் வெட்டும் விழுந்தன. தலை, கால்கள் முறிந்தன.
இதையும் பார்த்த கழுதைகள்—
நமக்குக் கொள்ளும் வேண்டாம், இந்தக் குத்து வெட்டும் வேண்டாம் என்று, உடனே தமக்குள் முடிவு செய்து கொண்டன.
நாம் எவ்வளவுக்கெவ்வளவு இன்பங்களை எதிர்பார்க்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு துன்பங்களும் ஏற்படும் என்பதை இதனால் அறிய முடிகிறது.
துரங்கு மூஞ்சிகள் #
அடுத்த ஊரில் நிகழும் தம் உறவினர் திருமணத்துக்கு அவசியம் போக வேண்டியிருந்தது முதலாளிக்கு. வேலைக் காரனிடம் வண்டியைக் கட்டச் சொன்னார். இரவு 10 மணிக்கு வண்டியும் புறப்பட்டது. வண்டியோட்டியும் உறங்கிவிட்டான். முதலாளியும் வண்டியில் ஏறி அமர்ந்ததும் உறங்கிவிட்டார். வண்டி ஒடிக்கொண்டே இருந்தது வெகு நேரம் ஆனபின்பு முதலாளி விழித்துக் கொண்டு வண்டி ஒட்டியைப் பார்த்து “ஊர் வந்து விட்டதா?” என்று கேட்டார். அதற்கு அவன், “எஜமான்! வண்டி நமது வீட்டைச் சுற்றித்தான் ஒடிக் கொண்டிருக்கிறது” என்றான். “ஏண்டா இப்படி?” என்றார். வருத்தத்தோடு. “சாமி தூக்கத்தில் செக்கு மாட்டைப் பூட்டிவிட்டேன், அது வீட்டிலே சுற்றிச் சுற்றி வருகிறது” என்றான் வண்டியோட்டி.
உடனே முதலாளி கோபமாக “வேறு மாட்டைப் பூட்டி வண்டியைச் சீக்கிரம் ஒட்டு” என்று சொல்லிவிட்டு மறுபடியும் உறங்கிவிட்டார். வண்டியோட்டியும் அதை அவிழ்த்துவிட்டு வேறு மாட்டைக் கொண்டு வந்து பூட்டி விட்டு, அவனும் உறங்கிவிட்டான். வண்டியும் ஒடிக் கொண்டிருந்தது.
பொழுது விடியும் நேரத்தில் முதலாளி விழித்து, ‘எங்கே ஊர் வந்துவிட்டதா?’ என்று கேட்டார். உடனே வண்டி ஒட்டி விழித்துக் கொண்டு “சாமி வண்டி நமது வீட்டண்டையேதான் ஒடிக்கிட்டிருக்கு, மன்னிக்கணும். நான் துரக்கக் கலக்கத்திலே ஏத்து (ஏற்றம் இறைக்கிற) மாட்டைக் கட்டிவிட்டேன். அது முன்னே போகவும் பின்னே வருவதுமாகவே இருக்கிறது. என்ன செய்வேன்?” என்றான்.
என்ன செய்வான் எசமானன்? முன்பு தூங்கினான்; இப்போது விழிக்கிறான்?
எப்படி? தூங்குமூஞ்சி முதலாளியும், தூங்குமூஞ்சி வேலையாளும். இப்படியும் நாட்டில் சிலருடைய வாழ்க்கைகள் நடைபெற்று வருகின்றன.
பொன்னும் பொரி விளங்காயும் #
ஒரு கிழவன் தான் தேடிய சிறு பொருளைத் தானும் உண்ணாமல், பிறர்க்கும் வழங்காமல் பொன்கட்டியாக, பொரிவிளங்காயளவு உருட்டி, அடுக்குப் பானை இருக்கும் இடத்தின் அடியில் புதைத்து வைத்திருந்தான்.
அவன் மக்களிடமும்கூட இதைச் சொல்லி வைக்கவில்லை. சொன்னால் சொத்துப் பறிபோய்விடும் என்பது அவன் கருத்து.
திடீரென ஒரு நாள் நோய்வாய்ப்பட்டான். படுத்து விட்டான். தொண்டையும் அடைத்துவிட்டது. அவனால் பேச முடியவில்லை.
கடைசிக் காலத்தில் அதைத் தன் பிள்ளைகளுக்குக் கொடுக்க எண்ணி, அனைவரையும் கூப்பிட்டு, அடுக்குப் பானை இருக்கும் இடத்தைக் காட்டி தன் 3 விரல்களையும் அடுப்புக் கட்டிபோல சேர்த்துக் காட்டி ‘அங்கே இருக்கிறது போய் எடுத்துக் கொள்ளுங்கள்’ என சாடை காட்டினான்.
அவன் மக்கள் கூடி, அவனுக்கு சாகப்போகிற நேரத்திலே பொரிவிளங்காய் மேல் ஆசை வந்திருக்கிறது என எண்ணி, அடுக்குப் பானையில் இருக்கும் பொரி விளங்காய் என்ற பலகாரத்தை எடுத்து வந்து தட்டி நசுக்கிக் கிழவன் வாயில் திணித்தார்கள். ஏற்கனவே அடைத்துக் கொண்டிருந்த தொண்டையில் இதுவும் சேர்ந்து அடைத்து, அப்போதே உயிரும் பிரிந்து போய் விட்டது.
பாவம்! அவனைப் பொறுத்தவரையில் பொன்னும் பொரிவிளங்காயாய்ப் போயிற்று.
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைக்கும்
கேடுகெட்ட மானிடரே! கேளுங்கள்—கூடுவிட்டு
ஆவிதான் போன பின்பு யாரே அனுபவிப்பர்
பாவிகாள் அந்தப் பணம்!
என்ற ஒளவையாரின் வாக்கு எவ்வளவு உண்மையாயிற்று.
வீண் பேச்சு #
புதிதாகத் திருமணம் செய்து கொண்ட கணவனும், மனைவியும் ஒரு வேலையும் இல்லாதபோது வீண் பேச்சுக்களைப் பேசிக்கொண்டிருந்தனர்.
கணவன் சொன்னான் ‘நான் நாள்தோறும் பால் குடிக்க வேண்டும்’ என்று. மனைவி சொன்னாள்: ‘நல்ல யோசனை: ஒரு பசு வாங்கி விடுங்கள்.’
கணவர் : நேற்றே ஒரு பசு , மாட்டைப் பார்த்து வந்தேன். நாளைய தினம் போய் வாங்கி விடுவேன்.
மனைவி : மாடு வாங்கி வரும்போதே இரண்டு பித்தளைச்சொம்பும் வாங்கி வந்துவிடுங்கள்.
கணவர் : எதற்காக இரண்டு பித்தளைச் சொம்பு?
மனைவி : ஒன்று பால் கறக்க; மற்றொன்று எங்கம்மா வீட்டுக்குப் பால் அனுப்ப.
கணவர் : ஏண்டி! நான் பணம் போட்டு வாங்கும் மாட்டுப் பாலைக் கறந்து உங்க அம்மா வீட்டுக்கு அனுப்புவது எதற்காக?
மனைவி : என்னைப் பெற்று வளர்த்து உங்களுக்குக் கட்டிக் கொடுத்தார்களே அதுக்காக.
கணவர் : அப்படியானால் நீ இங்கு இருக்காதே என அதட்டினான்.
இப்படியாக வாய் முற்றி, தடியால் அடித்து, மனைவியைத் தாய் வீட்டுக்கு விரட்டிவிட்டான். அவளும் அங்கு போய் பல மாதங்கள் ஆயிற்று.
இருவருமே தங்கள் தவறுகளை உணரும் காலம் நெருங்கியது.
மனைவியோடு பிறந்தவன், ‘ஒருநாள் மைத்துனனிடம் வந்து ‘அத்தான், நீ வாங்கிய மாடு எங்கள் வீட்டுக்குவந்து வைக்கோலை மேய்ந்து கொண்டிருக்கிறதே’ என்றான்.
அதற்கு மைத்துனன், ‘நான் மாடும் வாங்கவில்லை. பாலும் கறக்கவில்லை. வேலையில்லாதபோது வீணுக்குப் பேசிய பேச்சு அது’ என்று கூறி, மனைவியை அழைத்து. வந்து குடும்பத்தை நடத்தினான்.
இல்லறம் நடத்துவோர் இம்மாதிரி வேலையொன்றும் இல்லாதபோது வீண் பேச்சுக்களைப் பேசித் தொல்லை. க்ளை விளைவித்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
போகாத இடம் #
ஒர் ஊரிலே குயவரும் கம்மாளரும் நெருங்கிய நண்பர்கள். பிழைப்பில்லை; பெரும்பசி—வெளியூருக்குப் புறப்பட்டனர்.
வழியிலே, ஊர் நடுவிலே அக்கிரகாரம்—திருமணம் நடந்து கொண்டிருக்கிறது.
இருவரும் யோசித்தார்கள். நம் இருவருக்கும் பூணூல்தான் இருக்கிறதே. இந்த ஊரிலே நம்மை யார் அடையாளம் கண்டு பிடிப்பது—திருமண வீட்டிலே போய்ச் சாப்பிடலாமே, சாப்பிட்டுவிட்டே போகலாமே— என்ற முடிவுக்கு வந்து, ஐயர் வீட்டுத் திருமணத்திலே நுழைந்து விட்டார்கள். கும்பல்—ஒரே கூட்டம். இருவரும் சேர்ந்து போக முடியவில்லை. தனித்தனியாக பிரிந்து போய்ப் பந்தியில் உட்கார்ந்து விட்டார்கள்.
எல்லாம் பரிமாறிய பிறகு, பிராமணாள் எல்லாரும் கையில் தண்ணிரை வாங்கினார்கள். குயவரும் வாங்கி னார். எல்லோரும் கண்ணை மூடுவதைப் பார்த்தார்; தானும் மூடிக் கொண்டார்.
எல்லோரும் நீர் விளாவி, சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
குயவன் கண்ணைத் திறவாததால், மற்றவர்கள் உண்பதைக் காண முடியவில்லை, அதனால் கையில் நீரோடு கண்ணை மூடியபடியே உட்கார்ந்திருந்தார்.
சாம்பார் பரிமாற வந்த ஐயர்— ‘என்னாங்காணும், குசப்பிராமணனா யிருக்கிறீரே. சாப்பிடுங்காணும்’—என்று சொன்னார்.
இவர் உடனே கண்ணை விழித்து, ‘அதோ, கதவிடுக்கிலே உட்கார்ந்து கொண்டு சாப்பிடுகிற அந்தக் கம்மாளப் பையலா—என்னைக் குசவன்’ என்று சொன்னான்; அவனைப் பார்த்துக்கிறேன்—என்று கூறியதும்,
பந்தியில் உள்ள அனைவரும் உண்ணாமல் எழுந்து கூடி—
பாவம்! இவர்கள்.
போகாத இடந்தனிலே போகவேண்டாம் என்ற ‘உலக நீதி’ யைப் படித்திருந்தால், இப்படி நடை பெற்றிராது.
விக்டோரிய மகாராணியும் #
ஐந்தாம் ஜார்ஜும் இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து அரசி விக்டோரியா மகாராணி அவர்கள், தன் பேரன் ஐந்தாம் ஜார்ஜை {பிற்காலத்தில் மன்னன்) இளமையில் வெளிநாட்டில் ஒரு கப்பல்கட்டுந் துறையில் பணிபுரிய அனுப்பியிருந்தார். பேரனுடைய செலவுக்கு அங்குக் கிடைக்கும் சம்பளம் போதாது என்று எண்ணித் தானும் ஒரு ஐம்பது பவுன் மாதந்தோறும் அனுப்பிக்கொண்டிருந்தார்.
‘தன் செலவுக்கு இந்தப் பணமும் போதவில்லை’ என்று ஐந்தாம் ஜார்ஜு பாட்டி விக்டோரியா மகாராணிக்கு, ‘இனி நூறு பவுனாக அனுப்புங்கள்’ என்று எழுதிக் கேட்டிருந்தார்.
இதனைக் கண்டதும், மகாராணியார் சிந்தனையில் ஆழ்ந்தார். அதிகமாக அனுப்ப விரும்பவில்லை. அனுப்பாமல் இருக்க மனமும் ஒருப்படவில்லை அனுப்பாவிட்டால் பேரன் வருந்துவானே என்ற கவலை ஒருபுறம். அனுப்பினால் பேரன் அதிக செலவாளியாகிக் கெட்டுவிடுவானே என்ற வேதனை மற்றொருபுறம் என் செய்வார்! இந்தக் குழப்பத்திலே அவரால இன்னது செய்வது என்றே புரியல்லை.
பேரனை எண்ணி, கடிதம் எழுதுவார்; அதை அனுப்பாமல் கிழித்துக் போடுவார். எழுதுவதும், கிழித்துப் போடுவதுமாகச் சிலநாட்கள் சென்றன.
இறுதியாக, ‘உலகத்தையாளும் சக்கரவர்த்தினி, தன் பேரனுக்கு (வருங்கால மன்னனுக்கு)பணம் அனுப்ப மறுக்கலாமா?’ — என்று எண்ணிக் கடைசியாகப் பணம் அனுப்பப்போகும் போது, மனம் வரவில்லை; பணத்தையும் அனுப்பவில்லை.
பின், ஒருநாள் கடிதம்—அதில், அவன் பெருஞ் செல்வத்தில் பிறந்து வளர்ந்த குடிமகனாயினும், எப்படிச் இக்கனமாக இருந்து வாழ்க்கையை நடத்தவேண்டும் என்பது பற்றிய விதிகளை, அதற்குரிய வழிகளை எல்லாம் நன்கு விளக்கமாக விவரித்து எழுதி—கடிதத்தை உறையிற் போட்டு, அஞ்சலில் அனுப்பச் சொன்னார்.
அஞ்சலிற் போட்டுவிட்டு வந்தவனை நோக்கிப் பதைபதைத்து—‘அஞ்சல் நிலையத்துக்குச் சென்று, அக் கடிதத்தைத் திரும்பி வாங்கிவா’ என்று, அவனை அனுப்பினார்.
அங்கு போய் வந்த வேலையாள், “அஞ்சல் கட்டு எடுத்தாயிற்று; போய்விட்டது” என்று சொன்னான்.
விக்டோரியா மகாராணிக்குப் பெருங் கவலை—
‘பேரன் என்ன நினைப்பானே? என்ன செய்வானோ? எப்படிக் கஷ்டப்படுகிறானோ?’ — என்ற கவலையினாலே அவ்வாரம் முழுதும் சரியாக உண்ணாமலும் உறங்காமலுங் கூட இருந்து வருந்தினார்.
பேரனிடமிருந்து—
பத்தாம் நாள் கடிதம் வந்தது. அதைக் கண்டதும், பேரன் என்ன எழுதியிருக்கின்றானோ எப்படித் துயருறுகிறானோ? என்ற கவலையால், உடல் நடுங்கி, கைநடுக்கத் தோடு கடிதத்தைப் பிரித்துப் பார்த்தார்கள்.
அதில். இந்த நான்கு ஐந்து வரிகள்தான் இருந்தன :
“பாட்டி, இனிமேல் நீங்கள் இந்த ஐம்பது பவுனும் அனுப்ப வேண்டாம். நான் பணம் கேட்கும் போதெல்லாம் எனக்குச் சிக்கன வாழ்க்கைக்கான விவர விளக்கவியல் எல்லாம் எழுதி அனுப்பிக்கொண்டே இருங்கள் . அது போதும்! ‘சிக்கனமாக வாழ்வது எப்படி?’” எனும் புத்தகத்தின் ஆசிரியர் விக்டோரியா மகாராணி என்று— இதனை, ஒரு புத்தக வியாபாரிக்கு ஆயிரம் பவுனுக்கு விற்றுவிட்டேன்.”
இதைப் பார்த்ததும், உலகத்தையாண்ட மகாராணி யின் உள்ளம் எப்படி இருந்தது? எப்படி இருந்திருக்கும்?
இதனைப் படிக்கிற உங்கள் உள்ளம் எப்படி?
எதிர்காலத்தில் உலகை ஆளப்போகிற தன் பேரனுக்குப் பாட்டி எண்ணி எழுதியது?—பேரன்—வருங்காலத் தில் சக்கரவர்த்தியாக விளங்கப்போகிறவன் தன் பாட்டிக்கு தெய்தது? இவ் இரண்டையும் பற்றி—
உங்கள் உள்ளம் என்ன எண்ணுகிறது?